19.12.13

விக்னேஸ்வரன் ராஜிநாமா செய்ய முடிவு?



இலங்கையின் வடக்குமாகாண ஆளுநருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போருக்கு பிறகு தமிழர் பகுதியில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் ராஜிநாமா செய்தால், ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால் விக்னேஸ்வரனை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிபர் ராஜபட்ச ஈடுபட்டுள்ளார்.
வடக்கு மாகாண நிர்வாகத்தில் அப்பகுதியில் ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ நேரடியாக தலையிட்டு வருவதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் பொதுப் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் மனோ கணேசன், செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், "வடக்கு மாகாண ஆளுநர் - முதல்வர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் தொலைபேசியில் விளக்கி கூறினேன். இது தொடர்பாக விக்னேஸ்வரனுடன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதற்காக யாழ்பாணத்துக்கு வரவும் தயாராக உள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்' என்று மனோ கணேசன் கூறினார்.

No comments:

Post a Comment