சீன முன்னாள் அதிபர் மாவோவின் (மாசே துங்) 120வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.
தியான்மென் சதுக்கத்தில் உள்ள மாவோவின் நினைவிடத்திற்கு வியாழக்கிழமை காலை வந்து ஜி ஜின்பிங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தியதாகவும், மாவோவின் பெருமை மிகு சாதனைகளை அவர்கள் அப்போது நினைவு கூர்ந்ததாகவும் சின்குவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மாவோவின் பிறந்தநாள் விழாவை எளிமையாக கொண்டாடும்படி அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டிருந்ததார். இதனால் அவரது பிறந்தநாள்விழா பிரமாண்டமாக கொண்டாடப்படவில்லை.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருங்கிய பத்திரிகையாக கருதப்படும் தி க்ளோபல் டைம்ஸ், "மாவோ தனது ஆட்சிக்காலத்தில் தவறிழைத்தாகவும், அதேசமயம் அவரை குற்றம்சாட்டுபவர்கள், கடந்த 60 ஆண்டுகளில் சீனா அடைந்துள்ள வளர்ச்சியை மறந்து விடக்கூடாது' என்றும் கருத்து கூறியுள்ளது.
பெய்ஜிங்கில் வழக்கமாக மாவோ பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கான மைதானத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த "சூரியன் சிகப்பாக உள்ளது, தலைவர் மாவோ நமது அன்புக்குரியவர்' என்ற வாசகம் நீக்கப்பட்டு,"எனது நாட்டின் கடவுள்' என்ற வாசகம் சேர்க்கப்பட்டிருந்தது. மாவோவின் 120வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சீனா உருவாக்கப்பட்டதன் 65வது ஆண்டு விழா என்பதை முன்னிலைப்படுத்தும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
மாவோ பிறந்த மாகாணமான ஹுனானில் அவரது பிறந்தநாளையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், விருந்தும் நடைபெற்றன.
No comments:
Post a Comment