27.12.13

"இந்தியா}பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானது'

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குனர்களின் (டிஜிஎம்ஓ) சந்திப்பு டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவது முக்கியம் என்பதை இரு தரப்பு அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க இரு நாட்டு அதிகாரிகளும் ஹாட்லைன் தொலைபேசி மூலம் அவ்வப்போது தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தற்போது நடைபெற்றதுபோல, அடிக்கடி ராணுவ அதிகாரிகள் சந்தித்து நிலவரங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். சிறிய விஷயங்களை பெரிது படுத்தாமல், அதை கீழ் மட்டத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என்று தஸ்னீம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியதாவது:
இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக சாதகமான நிலையை ஏற்படுத்தி வருகிறது.
அண்டை நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தான் அரசு தேசிய பாதுகாப்புக் கொள்கையை வகுத்து வருகிறது என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குனர்கள் சந்தித்துக் கொள்வது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment