27.12.13

ஜன.15 வரை மலை ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க வரும் ஜனவரி 15-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், பொங்கலுக்குப் புதிதாக தட்கல் முறையில் 9 சீட்டுகள் மட்டும் முன்பதிவு செய்யும் முறை வியாழக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நீலகிரி மலை ரயிலில் பயணிக்க உள் நாடு மட்டுமில்லாது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பயணிக்க ஆர்வம் காட்டிவரும் நிலையில், மேட்டுப்பாளையம் முதல்  உதகை வரை பயணிக்க, 2014 ஜனவரி 15 வரையிலான முன்பதிவு வியாழக்கிழமையுடன் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதில் பலர் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக டிக்கெட் கிடைக்காத சுற்றுலாப் பயணிகள், மலை ரயிலில் பயணிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை 3 பெட்டிகளுடனும், குன்னூரில் இருந்து இரண்டு பெட்டிகள் கூடுதலாகவும் இணைக்கப்பட்டு 300 பயணிகளுடன் உதகைக்கு பயணிப்பது வழக்கம். தற்போது முன்பதிவு முடிந்த நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து பயணிக்க தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 சாதாரணக் கட்டணம் ரூ.25 என்றிருக்கும் நிலையில் தட்கலுக்கு ரூ.40 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் 9 தட்கல் டிக்கெட்டுகள் மட்டும் புக்கிங் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தட்கல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment