27.12.13

இலங்கையில் போரில் இறந்தவர்களை கணக்கெடுக்க வடக்கு மாகாண அரசு முடிவு

இலங்கையில் உள்நாட்டுப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை தனியாகக் கணக்கெடுக்கப் போவதாக வடக்கு மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 37 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், 2009இல் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற கடைசி மாதங்களில் சுமார் 40,000 அப்பாவி மக்கள் இறந்ததாகவும் ஐ.நா. மதிப்பிட்டது.
உள்நாட்டுப் போரில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற விவகாரம் தொடர்பான கருத்து வேறுபாடுகள், கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் எழுந்தன. இதையடுத்து, ராஜபட்ச அரசு போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உள்பட மக்கள்தொகையைக் கணக்கெடுக்கும் பணியை அவசரமாகத் தொடங்கியது.
இந்நிலையில், உள்நாட்டுப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை தனியாகக் கணக்கெடுக்கப் போவதாக வடக்கு மாகாண அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
இது குறித்து மாகாண அரசு அதிகாரிகள் கூறுகையில், ""அதிபர் ராஜபட்ச நடத்த உத்தரவிட்டுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உண்மையைத் திரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கும். அதன் விதிமுறைகளே இதற்குக் காரணம். எனவே நம்பகமான வேறொரு கணக்கெடுப்பு தேவைப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.
""நாங்கள் நடத்தவுள்ள கணக்கெடுப்புக்கான செயல்திட்டத்தை மாகாண கவுன்சில் உருவாக்கும்'' என்று வடக்கு மாகாணக் கவுன்சிலின் மூத்த உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் கூறினார்.
இதனிடையே, போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காகவே இலங்கை அரசு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுரேஷ் பிரேமசந்திரன் குறைகூறியுள்ளார்.

No comments:

Post a Comment