27.12.13

அமெரிக்கர் கடத்தப்பட்ட விவகாரம்: புதிய விடியோவை வெளியிட்டது அல்-காய்தா

பாகிஸ்தானில் 2011ஆம் ஆண்டு கடத்தப்பட்ட, அமெரிக்க தொண்டு நிறுவன அதிகாரியின் புதிய விடியோவை அல்-காய்தா வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள, பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் ஆலோசகராக வாரன் வெய்ன்ஸ்டீன், 9 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.
அவர் லாகூரில் உள்ள அவரது வீட்டில், அல்-காய்தா தீவிரவாதிகளால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டார். தற்போது அவர்களிடம் பிணைக் கைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வாரன் வெய்ன்ஸ்டீன் பேசிய புதிய விடியோவை அல்-காய்தா வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அல்-காய்தாவால் கடத்தப்பட்ட நான், தற்போது அமெரிக்காவால் முற்றிலுமாக மறந்து கைவிடப்பட்டுள்ளேன். பாகிஸ்தான் மீதான வான்வெளித் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தினால், அதற்கு கைமாறாக எனது உறவினர்களைச் சந்திக்க அல்-காய்தா பயங்கரவாதிகள் ஏற்பாடு செய்வாத உறுதியளித்துள்ளனர். அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, என்னை விடுவிக்க அல்-காய்தா அமைப்பிடம் பேச்சு நடத்த வேண்டும். மேலும் அதிபர் ஒபாமா பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வாரென் வெய்ன்ஸ்டீன் அந்த விடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே விடியோவில் அல்-காய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கூறியிருப்பதாவது:
வாரன் வெய்ன்ஸ்டீன் விடுவிக்கப்பட வேண்டுமானால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகள் மீது வான்வெளித் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று ஜவாஹிரி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக வாரன் வெய்ன்ஸ்டீன் பேசிய வீடியோவை 2012ஆம் ஆண்டு அல்-காய்தா அமைப்பு வெளியிட்டது. தற்போது புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment