27.12.13

தேவயானி விவகாரம்: விசா மோசடி கடுமையான குற்றமல்ல


இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீது சுமத்தப்பட்ட விசா மோசடியை ஒரு கடுமையான குற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்காவின் அலபாமா மாகாண முன்னாள் அரசு வழக்குரைஞர் ஜி.டக்ளஸ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு தேவயானி மீதான வழக்கைத் திரும்பப் பெறுவது சாத்தியமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜி.டக்ளஸ் ஜோன்ஸ் வாஷிங்டனில் பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியது:
தேவயானி, அவரின் பணிப் பெண் சங்கீதாவை உடல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்பதற்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
பணிப் பெண் சங்கீதாவுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாக கூறப்படுவதை குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதைக் கடுமையான குற்றமாக கருத அவசியமில்லை.
வியன்னா தீர்மானத்தின்படி குற்றம் என கூறுவதற்கு சரியான வரையறை இல்லை. சம்பந்தப்பட்ட நாடுகளே இதற்கான வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தேவயானி வெளிநாட்டிற்குச் சென்று விடக் கூடாது என்பதற்காக கூட அவரை அமெரிக்க போலீஸார் கைது செய்திருக்கலாம்.
இந்த வழக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானதாகும். இதை கையாள்வது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று ஜோன்ஸ் தெரிவித்தார்.
தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஜோன்ஸ், ""தேவயானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை திரும்பப் பெறுவது சற்று கடினமானதே என்றாலும் அது முடியாத காரியமில்லை'' என்று ஜோன்ஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment