கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளில் செல்ல 3 மணிநேரம் வரை சுற்றுலாப் பயணிகள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த நிலையைப் போக்க, பூம்புகார் படகுத்துறையை விரிவாக்கம் செய்து படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டையும் இங்கு தெளிவாகப் பார்க்கலாம் என்பதால் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இங்கு கடலின் நடுவே இருவேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இதனை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகுகளில் பயணம் செய்து நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
விவேகானந்தர் கடலில் நீந்திச் சென்று தவம் செய்த பாறையில், விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 1970-களில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்ட காலத்தில் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்து சென்றதால் "ஏக்நாத்' என்ற சிறிய அளவிலான படகு பயன்படுத்தப்பட்டது.
அதன்பிறகு தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில் பெரிய அளவிலான படகுகளைத் தயாரித்து இயக்கத் தொடங்கியது.
கடந்த 1.1.2000 முதல் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டு அங்கும் படகுப் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட விவேகானந்தா படகு 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் இழுத்துச் செல்லப்பட்டது. பழுதடைந்த நிலையில் இருந்த பாகீரதி படகின் இயக்கமும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, புதிதாக வாங்கப்பட்ட எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை, எம்.எல்.விவேகானந்தா என்ற மூன்று படகுகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை படகுப் போக்குவரத்து நடைபெறுகிறது. நபர் ஒன்றுக்கு படகுக் கட்டணமாக ரூ.34, விவேகானந்தர் பாறையில் நுழைவுக் கட்டணமாக ரூ.20 என மொத்தம் ரூ.54 வசூலிக்கப்படுகிறது. ரூ.34 படகுத்துறை அலுவலகத்திலும், நுழைவுக் கட்டணம் ரூ.20 விவேகானந்தர் மண்டபத்திலும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2.12.2013 முதல் இரு கட்டணமும் படகுத்துறை அலுவலகத்திலேயே வசூலிக்கப்படுகிறது.
பயணச்சீட்டு வாங்குவதற்காக சுற்றுலாப் பயணிகள் சுமார் ஒரு கி.மீ. வரை நீண்டவரிசையில் தொடர்ந்து 2 மணிநேரம் காத்திருக்கின்றனர். தற்போது இரு சீட்டுகளையும் ஒரே இடத்தில் வாங்க வேண்டியுள்ளதால் மேலும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முதியோர், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
"நாளுக்கு நாள் நல்ல கூட்டம் வருகிறது; வருமானமும் வருகிறது. பின்னர் ஏன் சுற்றுலாப் பயணிகளை இப்படி தவிக்கவிட வேண்டும். படகுத்துறையை விரிவாக்கம் செய்து, படகுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்' என்பதே ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் விருப்பம்.
No comments:
Post a Comment