தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.
சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் சார்பில் கேந்திரிய வித்யாலய சங்கேதனின் பொன் விழா சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கலாம் பேசியது:
கடந்த 1963ஆம் ஆண்டு 20 பள்ளிகளுடன் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தொடங்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
சென்னை மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த அமைப்புக்கு எனது வாழ்த்துகள்.
மாணவர்களிடம் பெரிய தாக்கத்தை ஆசிரியர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்த முடியும்.
ராமேசுவரம் தொடக்கப்பள்ளியில் எனது அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பறவைகள் குறித்து பாடம் நடத்தினர். அப்போது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை வகுப்பறையில் விளக்கியதோடு, கடற்கரைக்கு அழைத்துச்சென்று எங்களை நேரடியாகவும் பார்க்கச் செய்தார். சிறுவனாக இருந்த என் மனதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அடுத்து அவரிடம், "விமானியாக என்ன படிக்க வேண்டும்?' என்றுதான் கேட்டேன்.
அவரது ஆலோசனைப்படியே, பட்டப்படிப்பில் இயற்பியல் படித்தேன். அதன்பிறகு ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பும் படித்தேன். நான் ராக்கெட் என்ஜினியராக, விண்வெளி விஞ்ஞானியாக பணியாற்றியிருந்தாலும், விமானியாக வேண்டும் என்கிற கனவு அவரது வகுப்பில்தான் உருவானது.
அந்தக் கனவை விடாமுயற்சியோடு பின்தொடர்ந்தேன். ஒருதுறையில் சிறந்து விளங்குவது என்பது விபத்தல்ல. அது ஒரு தொடர் முயற்சி. அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும் என்பது ஒரு கலாசாரமாகவே மாற வேண்டும். இந்த கலாசாரத்தை ஆசிரியர்கள்தான் மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும், என்றார் அவர்.
கேந்திரிய வித்யாலய சங்கேதன் அமைப்பின் சென்னை மண்டல துணை கமிஷனர் என்.ஆர்.முரளி, சென்னை ஐ.ஐ.டி. டீன் பேராசிரியர் ராமமூர்த்தி, சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment