வரும் மக்களவைத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு புதன்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோராம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தில்லியில் ஆம்ஆத்மி கட்சியினால் காங்கிரசுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.இந்திரா காந்தி காலம் முதல் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்விகளையும், மிகப்பெரிய வெற்றிகளையும் மாறிமாறி சந்தித்துள்ளது. தோல்விகளைக் கண்டு துவளும் கட்சி காங்கிரஸ் அல்ல. எனவே, 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பின்னடைவு என்பதை ஏற்க முடியாது. யாருக்கு பின்னடைவு என்பது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே தெரிய வரும்.
தமிழகத்தில் திமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை. இது குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையிலானது. தற்போது எந்தக் கட்சியும் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.நாங்கள் (காங்கிரஸ்) கூட தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் தலைவர்களுடன் அரசியல் நிலவரம் குறித்து பேசி வருகிறோம். இதனை கூட்டணி பேச்சுவார்த்தையாக எடுத்துக் கொள்ள முடியாது.
கோஷ்டி பூசல்களுக்கு அப்பாற்பட்டு கட்சியின் நலனுக்காக உழைத்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவர் கோஷ்டி, இவர் கோஷ்டி என பார்க்காமல் அனைவரும் காங்கிரஸ் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும்.புதிய நிர்வாகிகள் பட்டியலில் ஒரு சிலரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அவர்களுக்கும் பொறுப்பு கொடுத்து கட்சிப் பணியில் ஈடுபடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
No comments:
Post a Comment