25.12.13

சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் எந்த கோப்பும் நிலுவையில் இருக்காது



சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் எந்த கோப்பும் நிலுவையில் இருக்காது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியதைத் தொடர்ந்து வீரப்ப மொய்லிக்கு கூடுதலாக அத்துறையின் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
பல கோப்புகளை நிலுவையில் வைத்ததால்தான் ஜெயந்தி நடராஜன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டதாக தகவல்கள் வெளியாயின. அதை ஜெயந்தி நடராஜன் மறுத்தார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கட்சிப் பணியில் ஈடுபடுவதற்காகவே சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சுற்றுச்சூழல் அமைச்சகப் பொறுப்பை ஏற்ற மொய்லி, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுற்றுச்சூழல் துறையில் எந்த கோப்புமே நிலுவையில் இருக்காது. நான் சட்ட அமைச்சராக இருந்தபோது அந்த அமைச்சகத்தில் ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்துள்ளேன்.
கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சராக இருந்தபோதும் எந்த கோப்பையும் நிலுவையில் வைத்ததில்லை.
சுற்றுச் சூழல் அமைச்சகத்திலும் என்னால் சிறப்பாகச் செயல்படமுடியும். இதற்கான சட்ட விதிமுறைகளைச் சிறப்பாக செயல்படுத்துவேன் என்றார்.
சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு ஜெயந்தி நடராஜனின் தில்லியில் உள்ள இல்லத்திற்கு சென்று வீரப்ப மொய்லி சந்தித்துப் பேசினார்.

No comments:

Post a Comment