25.12.13

பழனி அருகே வரதமாநதி அணை நிரம்பியது


பழனி அருகே கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள வரதமாநதி அணைக்கட்டு செவ்வாய்க்கிழமை நிரம்பி வழிந்தது.

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் வரதமாநதி அணைக்கட்டு உள்ளது.  இது திண்டுக்கல் மாவட்டத்தின் சிறிய அணை ஆகும். இந்த அணையால் கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், பழனி, எரமநாயக்கன்பட்டி கிராமங்களை சேர்ந்த சுமார் 5200 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் அணைக்கட்டுகள் நீரின்றி வறண்டு வரும் நிலையில் கொடைக்கானல் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பெய்து வரும் சாரல் மழையால் பழனி அருகே உள்ள இந்த அணை செவ்வாய்க்கிழமை நிரம்பியது. 
மொத்தம் 596.16 மில்லியம் கனஅடி அளவு நீர் உள்ள அணையின் மொத்த உயரம் 67.47 அடியாகும்.  அணைக்கு தற்போது வினாடிக்கு 10 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.  அணையின் மேல்மட்டம் நிரம்பி வழியும் நிலையில் அணைக்கு வரும் 10 கனஅடி நீர் அணைக்கு கீழே உள்ள மதகு வழியாக வெளியேற்றப்படுவதாக உதவிப் பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  பழனிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது பாலாறு பொருந்தலாறு அணை ஆகும்.  மாவட்டத்தின் பெரிய அணையான இதன் மொத்த உயரம் 65 அடி. 
தற்போது 38.94 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 10கனஅடி நீர் வரத்து உள்ளதாகவும் அது அப்படியே வெளியேற்றப்படுவதாகவும் உதவிப் பொறியாளர் வினோத் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment