25.12.13

பத்மஸ்ரீ விருதுகளை திரும்ப ஒப்படைக்க தெலுங்கு நடிகர்களுக்கு உத்தரவு




திரைப்படங்களில் பெயருக்கு முன்பு "பத்மஸ்ரீ' என விருதுப் பெயர் சேர்த்துக் கொள்ளப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த விருதுகளை திரும்ப ஒப்படைக்கும்படி தெலுங்கு நடிகர்கள் மோகன் பாபு மற்றும் பிரம்மானந்தத்திற்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திரைப்படத்துறையில் ஆற்றிய சேவைகளுக்காக கடந்த 2007ஆம் ஆண்டு மோகன்பாபுவுக்கும், 2009ஆம் ஆண்டு பிரம்மானந்தத்திற்கும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கியது. இந்நிலையில், "டேனிகினா ரெட்டி' என்னும் திரைப்படத்தில் விதிமுறைகளை மீறி, அவர்கள் இருவரும் தங்களது பெயர்களுக்கு முன்பு பத்ம ஸ்ரீ என்ற விருதுப் பெயரைப் பயன்படுத்தியதாக ஆந்திர மாநில பாஜக பிரமுகர் இந்திர சேனா ரெட்டி என்பவர், அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பத்மஸ்ரீ விருதுகளை திரும்ப ஒப்படைக்கும்படி தெலுங்கு நடிகர்கள் மோகன் பாபு மற்றும் பிரம்மானந்தத்திற்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையையும் 30ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment