25.12.13

ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு: காங்கிரஸில் கருத்து வேறுபாடு



தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க ஆதரவு அளித்திருக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி, ஆம் ஆத்மி ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதென்று எடுக்கப்பட்ட முடிவு தவறு என்ற கருத்து காங்கிரஸ் தலைவர்களிடையே நிலவுவதாக கூறினார். அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகிச் செல்லுமானால், மத்தியில் முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றதுபோன்று, காங்கிரஸ் கட்சியும் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்து துணைநிலை ஆளுநரிடம் அளித்துள்ள ஆதரவு கடிதத்தை காங்கிரஸ் உடனடியா வாபஸ் பெறுமா என்ற கேள்விக்கு, அதுபோன்ற அதீத நடைமுறையை காங்கிரஸ் பின்பற்றாது என்று அவர் கூறினார். தில்லியில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி போன்று செயல்படும் என்றும், மக்களின் பிரச்னைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அநியாயத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும் என்றும் துவிவேதி கூறினார்.
அகமது படேல் கருத்து: ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேலிடம், ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்க எதிர்ப்பு எழுந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஒரு அமைப்பில் பல்வேறு கருத்துகள் இருக்கும் என்றும், ஆனால் தற்போதைக்கு ஆம் ஆத்மி கட்சிக்கு தங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment