தில்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும், முந்தைய காங்கிரஸில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆதரவுடன் தில்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி ஆயத்தமாகி வருகிறது. இதையடுத்து, அரவிந்த் கேஜரிவால் அளித்த "ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதம்' தொடர்பான அறிக்கையை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு திங்கள்கிழமை அனுப்பி வைத்தார். பிரணாப் முகர்ஜி தற்போது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளதால் ஆம் ஆத்மி தலைமையில் புதிய அரசு அமைய அவரது எழுத்துப்பூர்வ கடிதத்துக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.
ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு: ஆம் ஆத்மி தலைமையிலான அரசின் பதவியேற்பு விழா, ராஜ் பவனுக்குப் பதில், ராம்லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என்று அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, ராம்லீலா மைதானத்தை வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள், தில்லி காவல் துறை, பொதுப்பணித் துறை மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
மேலும், ராம்லீலா மைதான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மத்திய உள்துறை, தில்லி அரசு, காவல்துறை, ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, வியாழக்கிழமை (டிசம்பர் 26) பதவி ஏற்பு நிகழ்வு நடத்தும் வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
அனுமதி கடிதத்தால் தாமதம்: ஆனால், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை எழுத்துப்பூர்வ தகவல் வரவில்லை. இதையடுத்து அதிகாரிகள் பேசுகையில், "பதவியேற்பு விழாவை பொது இடத்தில் நடத்த திட்டமிடுவதால், ஒரே நாளில் விழா மேடை, பந்தல் அமைப்பது, பார்வையாளர்கள் வந்து செல்லத் தேவையான வசதிகளை செய்து தருவது, தில்லி மாநகராட்சி மற்றும் பொதுப் பணித் துறையின் பொறுப்பு.
ஆனால், டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அதற்கு மறுநாளே ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் நடைமுறைப் பிரச்னைகள் உள்ளன' என்றனர். அத்துடன் எந்த முடிவும் எடுக்காமல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் முடிவுற்றது.
கேஜரிவால் விளக்கம்: இந் நிலையில், தில்லி முதல்வராக பொறுப்பேற்பதை முன்னிட்டு, அரவிந்த் கேஜரிவால் பொதுமக்களிடையே பேசும் விடியோ காட்சியை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த விடியோவில் கேஜரிவால் பேசியுள்ளதாவது:
"தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடம் இருந்து விலகி இருப்பது மற்றும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சி அமைத்து மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆகிய இரண்டு வாய்ப்புகள் நம்முன் இருந்தன. இப்போது காங்கிரஸ் ஆதரவுடன்தான் நாம் ஆட்சி அமைக்கிறோம். அதே நேரத்தில் அமைச்சரவையில் காங்கிரஸýக்கு இடம் கொடுக்க மாட்டோம்.
காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழல் செய்திருந்தால் அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்படும். தவறு உறுதிபடுத்தப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று கூறிய போது, "பயந்து ஓடுகிறது' என்று பாஜக விமர்சனம் செய்தது. ஆட்சி அமைக்க முன்வரும் போது நம்மை காங்கிரஸ் கட்சியின் இன்னொரு அணி (பி-டீம்) என்று பாஜக கூறுகிறது.
ஆம் ஆத்மி கட்சிக்கு சாதாரண மனிதர்கள்தான் முக்கியமே தவிர காங்கிரஸ், பாஜகவைப் பற்றிக் கவலையில்லை' என்று அதில் பேசியிருந்தார்.
புதிய அமைச்சர்கள் யார்?
அரவிந்த் கேஜரிவால் தலைமையில் அமையவுள்ள தில்லி அமைச்சரவையில் இடம்பெற பரிசீலிக்கப்படும் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவரம் வருமாறு:
மணீஷ் சிசோடியா (41), பட்பர்கஞ்ச் தொகுதி; ராக்கி பிர்லா (26), மங்கோல்புரி தொகுதி; சோம்நாத் பாரதி (39), மாளவியா நகர் தொகுதி; செüரவ் பரத்வாஜ், கிரேட்டர் கைலாஷ் தொகுதி; கிரீஷ் சோனி, மடிபூர் தொகுதி; சத்யேந்திர ஜெயின், ஷகுர் பஸ்தி தொகுதி.
எம்எல்ஏ அதிருப்தி: இதற்கிடையே, அமைச்சரவையில் சேர்க்க பரிசீலிக்கப்பட்ட பெயர்களில் தனது பெயர் விடுபட்டு விட்டது என்று லக்ஷ்மி நகர் தொகுதி உறுப்பினர் வினோத் குமார் பின்னி அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை ஆம் ஆத்மி தலைவர்கள் அழைத்து சமாதானப்படுத்தினர். இவர் முந்தைய காங்கிரஸ் அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.கே. வாலியாவைத் தோற்கடித்தவர் ஆவார்.
அதிகாரிகள் தேர்வு: இந் நிலையில் முதல்வர் அலுவலகத்தின் முதன்மைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர குமாரை அரவிந்த் கேஜரிவால் தேர்வு செய்துள்ளார். கேஜரிவால் படித்த கரக்பூர் ஐஐடியில் படித்தவர் ராஜேந்திர குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி அரசில் புதிய அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளவர்கள் (இடமிருந்து): மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, கிரீஷ் சோனி, செளரப் பரத்வாஜ், சத்யேந்திர ஜெயின், ராக்கி பிர்லா.
No comments:
Post a Comment