25.12.13

இளையராஜாவின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிப்பு



ஆஞ்சியோபிளாஸ்ட்டி - ஸ்டென்ட் சிகிச்சை செய்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவின் (69) உடல் நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மலேசியாவில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையை திங்கள்கிழமை இளையராஜா பார்வையிட்டார். சிற்றுண்டி சாப்பிட்டபோது அவருக்கு தொடர்ந்து விக்கல் உண்டாகி, பின்னர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய÷இதயத் துடிப்பை கண்காணித்த மருத்துவர்கள் இளையராஜாவுக்கு லேசான மாராடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவருக்கு "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இதயத் தசைக்கு ரத்தத்தை விநியோகிக்கும் 3 கரோனரி ரத்தக் குழாய்களில், ஒரு கரோனரி ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. நலமுடன் உள்ள போதிலும் இளையராஜாவுக்கு பூரண ஓய்வு தேவைப்படுவதால் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் இளையராஜா ஓய்வெடுத்தார். குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இளையராஜாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
இளையராஜாவின் இதயத் துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment