இந்திய சில்க் மார்க் நிறுவனம் (எஸ்.எம்.ஓ.ஐ) சார்பில் "சில்க் மார்க் கண்காட்சி' சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று தொடங்கவுள்ளது.
இது குறித்து சென்னை சில்க் மார்க் நிறுவன முதன்மை அதிகாரி மற்றும் மத்திய பட்டு வாரிய துணை செயலாளர் டி.கிருபாகரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்திய சில்க் மார்க் நிறுவனம் மத்திய அரசின் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தூய பட்டுக்கு சில்க் மார்க் முத்திரை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தால் சில்க் மார்க் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்க உள்ளனர். இந்தக் கடைகளில் மல்பெரி, டசார், எரி, மூசா மற்றும் வன்யா பட்டு வகைகளைச் சேர்ந்த பட்டுத் துணிகள் பல்வேறு டிசைன்களில், பல ரகங்களில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதில் விற்பனை செய்யப்படும் அனைத்து துணி வகைகளும் சில்க் மார்க் முத்திரை கொண்ட 100 சதவீத தூய பட்டாகும்.
கண்காட்சியில் தூய பட்டு உற்பத்தி, தயாரிப்புப் பற்றிய நேரடி விளக்கம் மற்றும் நுகர்வோர் வாங்கும் பட்டு தூய்மையானதா என பரிசோதிக்கும் வசதிகளும் கொண்ட தனி வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன.
நுகர்வோர் தூய பட்டுத் துணிகளை இங்கு பேரம் பேசி வாங்கலாம்.
இந்த மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் கிருபாகரன்.
No comments:
Post a Comment