4.12.13

ஆயுர்வேதம் சொல்லும் உணவின் அளவு எவ்வளவு!



நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவை ‘லகு’ என்றும், சிரமப்பட்டு உணவை உடைத்துக் கூழாக்கி நீண்ட நேரத்திற்குப் பிறகு ஜெரிக்கும் உணவு வகைகளை ‘குரு’ என்றும் இருவகைகள். அரிசி, கொள்ளு, பொரி, கசப்பு, துவர்ப்பு மிகுந்த பொருட்களை எளிதில் ஜீர்ணமாக்கி விடுகிறோம். மாப்பண்டங்கள், இனிப்பு வகைகள் அனைத்தும் மெதுவாக ஜீர்ணமாகின்றன. இது இயற்கையான நியதி என்றிருந்தாலும் உணவை சமைப்பதன் மூலம் ‘குரு’வான உணவை எளிதில் ஜெரிப்பதிலும், ‘லகுவான’ உணவை குருவாக்கவும் செய்து விட முடிகிறது. கோதுமை சப்பாத்தியை நெருப்பில் இட்டு பாகப் படுத்துவதும், அரிசியை பொங்கலாக்குவதும் அதற்கு உதாரணங்கள். உடற்பயிற்சியின் மூலமாக உடல் பலமும் அக்னி பலமும் நன்றாக அமைந்தவர்களுக்கு எவ்வித உணவையும் எளிதில் ஜீரணித்து விடுகின்றனர்.
உடல் பலமும் அதற்கேற்ப அக்னி பலமும் பருவநிலைகளால் மாறுபடுகின்றன. குளிர் காலங்களில் உடலும் அக்னிபலமும் அதிகரித்திருக்கும். மழைக்காலம், கோடைக்காலம் இவைகளில் குறைந்தும், இளவேனிற் காலம், இலையுதிர் காலம் போன்ற பருவங்களில் நடுத்தரமாகவும் இருக்கும்.கர்ப்பப்பையில் சினை முட்டையின் சேர்க்கை நிகழ்ந்ததும் குழந்தையின் வாத பித்த கப தோஷங்களின் சேர்க்கையின் அளவும், ஜீரண சக்தியின் பலமும் அந்த தோஷங்களாலும் தீர்மாணிக்கப்படுகின்றன. தாயாரின் பாலை மட்டுமே அருந்தி வளரும் குழந்தை பெரிதானதும் அறுசுவை உணவையும் ஜீர்ணிப்பதை காண்கிறோம்.குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் முடிய உள்ள வயது காரணமாகவும், வசிக்கும் இடம் காரணமாகவும், ஜீரண சக்தி வேறுபடுகிறது. கடற்கரை ஓரம், சதுப்பு நிலங்கள் போன்ற இடங்களில் சிறிதளவு உணவைக் கூட ஜீரணிக்க முடியாத சில உடல் நிலைகள், வரண்ட இடங்களில் வசிக்கும்போது எவ்வித உணவையும் ஜீரணிக்கும் தன்மையை பெறுகின்றன.
நமது புலன்களுக்குப் புலப்படாத இந்த அக்னியின் பலத்தை அவரவர்கள் தான் நன்கு உணர முடியும். சர்க்கரையில் உள்ள இனிப்பு, அனுபவ வாயிலாகவே அறிய முடியும். எனவே அவரவர் தன் உடல் நிலையைத் தானாகவே நன்கு அறிந்து கொண்டு அக்னி பலத்தைத் தீர்மாணித்து எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருள்களை திருப்தி ஏற்படும் வரையில் உண்ணலாம். அதிலும் அதிக திருப்தி ஏற்படும்வரை உட்கொள்ளுதல் கூடாது. தாமதித்து ஜீரணமாகும் உணவுப் பொருட்களை “மேலும் ஓர் பங்கு சாப்பிடலாம்” என்று தோன்றும் பொழுதே உண்பதை நிறுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவை நன்கு ஜீரணம் அடையும். அவரவர் ஜீரண சக்திக்குத் தகுந்தவாறு உண்ண வேண்டும் என்று கூறியதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தன் ஜீரண சக்தியை அறிந்து தன் இரைப்பை கொள்ளும் அளவை நான்கு சமபாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றுள் இரண்டு பாகங்களை அன்னம் போன்ற கனமான பொருள்களாலும், மற்றொரு பாகத்தை தண்ணிர் முதலிய திரவங்களாலும் நிரப்பி எஞ்சியுள்ள மற்றொரு பாகத்தை காலியாகவே விட்டுவிட வேண்டும். இந்த அளவு முறையை அநுபவ வாயிலாக அறிய வேண்டும். வேறு எந்த வழியும் பூரணமான வழியாகாது. அவ்வப்போது அவரவர் தீர்மாணிப்பதே சாலச் சிறந்தது.
இடைவெளியில்லாமல் வயிற்றின் முழு பகுதியையும் உணவால் நிரப்பியால் உணவு அசையக்கூடமுடியாமல் தேங்கி ஜீரணமாகாமல் நிற்கும். ஆகவேதான் நான்கில் ஒரு பகுதியை காலியாக விட வேண்டும் என்ற உபதேசத்தை ஆயுர்வேதம் நமக்களிக்கிறது. அதிக அளவில் கனமான பொருளை சாப்பிட்டால் உணவு நெகிழ்ச்சி ஏற்படாமல் மந்தித்து நிற்கும். அதை தளர்வு செய்ய தண்ணீரை உணவின் இடையில் சிறிய அளவில் பருக வேண்டும். திரவமான உணவை அதிக அளவில் ஏற்றால் அது எளிதில் ஜீரணமாகி மறபடியும் பசியை எடுக்கச் செய்யும். அடிக்கடி உண்பது ஆரோக்யத்திற்கு ஏற்றதல்ல. திரவ உணவிற்கு சத்தும் குறைவு என்பதால் உடல் மெலிந்து விடும். தண்ணீரை உணவிற்கு முன்பும் உணவிற்குப் பின்னர் குடிப்பதும் தவறாகும். உணவிற்கு முன் குடித்தால் வயறு நிரம்பி விடும். கனமான பொருளை சரியான விகிதத்தில் உண்ண முடியாது. ஜீரணமாகாது. உணவிற்குப் பின் தண்ணீர் குடித்தால் கபநோய்கள் ஏற்பட்டு உடல் பருமன், ஜலதோஷம் போன்றவை ஏற்படலாம். ஆகவே பசியை நன்குணர்ந்து உணவை நாம் உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment