மதுரை: பல்கலைக்கழகம் அனுமதி வழங்காத பாடப்பிரிவில் மாணவர்களை சேர்த்த கல்லூரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை ஆசிரமத்திற்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெல்லை, கள்ளிகுளம் தட்சிணமாற நாடார் சங்க கல்லூரியின் மாணவர்கள் நியூட்டன், அறிவுசுந்தரி, அருள்செல்வராணி உட்பட 9 பேர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: கல்லூரியில் எம்காம் சிஏ படிப்பில் சேர்ந்தோம். எங்களுக்கு முதல் பருவத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கவில்லை. தேர்வு எழுத அனுமதி கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது, ‘தட்சணமாற நாடார் கல்லூரியில் எம்காம் சிஏ படிப்புக்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்கவில்லைÕ என தெரிவித்தனர்.
கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘விரைவில் பல்கலைக்கழக அனுமதி பெற்றுவிடுவோம் என்றனர். பல்கலைக்கழக அனுமதி கிடைக்காததால் நாங்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழகம் அனுமதி அளிக்காத பாடப்பிரிவில் மாணவர்களை சேர்த்ததால், ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கல்லூரி நிர்வாகம் ஐகோர்ட் கிளை பதிவாளரிடம் ரூ.9 லட்சத்தை, டெபாசிட் செய்தது.
நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: பல்கலைக்கழகம் அனுமதி வழங்காத பாடப்பிரிவில் மாணவர்களை சேர்த்தது கடுமையான குற்றம். இதற்காக கல்லூரிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் அனுமதி வழங்காத பாடப்பிரிவில் எந்த கல்லூரியும் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்பதற்காக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு மற்ற கல்லூரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். அதற்காக கல்லூரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. கல்லூரி ஏற்கனவே ரூ.9 லட்சம் டெபாசிட் செய்துள்ளது. அதில் ரூ.2 லட்சம் போக, மீத தொகையை கல்லூரிக்கு திரும்ப வழங்க வேண்டும்.
எம்காம் சிஏ படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களின் நலன் கருதி, இப்படிப்புக்கு பல்கலைக்கழகம் தற்காலிக அனுமதி வழங்கவேண்டும். நிரந்தர அனுமதி கேட்டு கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள மனுவை பல்கலைக்கழகம் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வுக்காக சிறப்பு தேர்வு நடத்தவேண்டும். அபராதத் தொகை ரூ.2 லட்சத்தை, நெல்லை காந்திமதியம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரமத்திற்கு வழங்கவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment