ஏற்காடு தொகுதியில் நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்காடு தொகுதி பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் சேலம் மாவட்ட போலீசார், வெளிமாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தொகுதி முழுவதும் பதற்றமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்காடு இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையிலும், வாக்காளர்கள் பணம் வாங்கினால் ஓராண்டு சிறைத்தண்டனை என்பதை பொதுமக்களிடம் விளக்கி ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் 2 கூடுதல் சூப்பிரண்டுகள், 9 துணை சூப்பிரண்டுகள் மற்றும் 35 சிறப்பு படைகளுடன் வாழப்பாடி, பேளூர், சிங்கிபுரம், கூட்டாத்துப்பட்டி, அனுப்பூர் ஆகிய ஊர்களில் மொத்தம் 128 கிராமங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மேலும் ஏற்காட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரால் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை வாழப்பாடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் சேலம் மாநகர போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பு ஒத்திகை நடத்தினார்கள்.
வாழப்பாடி பருத்தி மண்டி பகுதியில் போலீசாரின் அணிவகுப்பு தொடங்கி, வாழப்பாடி பஸ் நிலையம் வழியாக சென்று பேளூர் பிரிவு ரோட்டில் முடிந்தது. இந்த அணிவகுப்பில் சுமார் 500 போலீசார் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment