இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்துவதோடு, அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றே அழைக்கிறது.
அங்கு இந்திய தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது.இப்பிரச்னை தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அருணாச்சல பிரதேசத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இடாநகரில் உள்ள சட்டசபையில் எம்எல்ஏக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான பகுதி. இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இம்மாநிலத்தை இணைக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாநிலத்தின் எல்லை பகுதிகள் 3 நாடுகளோடு தொடர்பு கொண்டிருப்பதால் அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என்றார்.
இந்நிலையில், எல்லை பிரச்னையை தீவிரமாக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் குயின் கேங் கூறுகையில், ‘‘இருநாடுகள் இடையிலான உறவை பாதுகாப்பதில் சீனாவுடன் இணைந்து இந்தியா செயல்படும் என நாங்கள் நம்புகிறோம். எல்லை பிரச்னையை சிக்கலாக்கும் வகையில் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால்தான் எல்லைப் பகுதியில் அமைதியை காக்க முடியும்’’ என்றார்.
No comments:
Post a Comment