தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ‘வீடு தோறும் நரேந்திரமோடி இல்லந்தோறும் தாமரை’ என்ற பிரசார தொடக்க விழா சென்னை மேடவாக்கத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இந்த பிரசார யாத்திரையை பாரதீய ஜனதா மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் நரேந்திரமோடிக்கு ஆதரவாக கிராம யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 645 கிராம பஞ்சாயத்துகளில் இந்த யாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரையின் போது வீடு வீடாக சென்று அவர்களது மனநிலை, நரேந்திர மோடி பற்றிய தகவல்கள், கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்வோம்.
மேலும் குடும்பத்தில் உள்ள தலைவரின் செல்போன் எண்கள் வாங்கப்படும். அந்த செல்போன் எண்ணிற்கு நரேந்திரமோடி நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவார். இந்த பகுதியில் நான் 7 நாள் யாத்திரை செய்ய உள்ளேன்.
இலங்கை பிரச்சினை பற்றி சென்னையில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் 2 மணி நேரம் பேசினார். அப்போது இலங்கை பிரச்சினைக்கு பாரதீய ஜனதா கட்சி தான் காரணம் என்ற தவறான தகவல்களை தெரிவித்து உள்ளார். மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் இந்தியா வழங்கும் ஆயுதம் இந்தியவம்சாவளிகளான தமிழர்களை கொல்ல பயன்படுத்தப்படும் என்பதால் ஆயுதங்களை வாஜ்பாய் வழங்க மறுத்தார்.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கினால் அது எப்படி இந்தியாவிற்கு எதிராக திரும்புமோ, அதுபோல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கினால் தமிழர்களுக்கு எதிராக திரும்பும் என்பதால் வழங்கப்படவில்லை. மேலும் இலங்கை வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க நாங்கள் மறுத்துவிட்டோம். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்தியாவிற்கோ, இலங்கை தமிழர்களுக்கோ எந்தவித பயனும் கிடையாது. அது ராஜபக்சேவிற்கு தான் நன்மையாக இருக்கும் என்பதால் தமிழக பாரதீய ஜனதா கட்சி எதிர்த்தது.
ஆனால் தற்போது உள்ள மன்மோகன்சிங் அரசு, இலங்கைக்கு பெரும் அளவில் ஆயுதங்களை வழங்கி உள்ளது. இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளது. பணத்தை வாரி வழங்கி உள்ளது. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ராஜபக்சே முழு பொறுப்பு. இதற்கு இந்திய அரசு முழு தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டும். அதில் ப.சிதம்பரத்திற்கு 50 சதவீத பொறுப்பு உண்டு.
சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மின்வெட்டுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. கடந்த மே மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மின்வெட்டு ஏற்படாமல் இருந்ததற்கு மத்திய அரசு தான் காரணம் என கூற முடியுமா? குறை கூறுவதை விட்டுவிட்டு மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவதாக வாக்குறுதி தரப்பட்டது. மக்களுக்கு தந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். டீசல் விலை உயர்வு கண்டிக்கிறோம். இதனால் விலைவாசி உயர்வு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment