10.12.13

காவிரி விவகாரம்: புதுதில்லியில் சட்ட வல்லுநர்களுடன் டிச.16-இல் ஆலோசனை: டி.பி.ஜெயசந்திரா

காவிரி விவகாரம் தொடர்பாக புதுதில்லியில் டிச.16-ஆம் தேதி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு அடுத்தாண்டு ஜன.15-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடக அரசின் வாதங்களை திறமையாக முன்வைப்பது குறித்து புதுதில்லியில் டிச.16-ஆம் தேதி சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவோம். காவிரி வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதிட்டுவரும் மூத்தவழக்குரைஞர் ஃபாலி நாரிமான் மற்றும் அவரது வழக்குரைஞர் குழுவினர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்தகூட்டத்தில் அரசு சார்பில் நானும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும் கலந்து கொள்ளவிருக்கிறோம். இந்த விவகாரம் குறித்து முன்கூட்டியே முதல்வர் சித்தராமையாவுடன் கலந்தாலோசிக்கப்படும்.
காவிரி நதியில் இருந்துகர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்வது, சிம்ஷா, மேக்கேதாட்டு அருகே நீர்த்தேக்கம் அமைப்பது, நீர்மின் உற்பத்தி செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். சிம்ஷா, மேக்கேதாட்டு உள்பட 3 இடங்களில்நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிட்டிருப்பதால், இதற்காக 30-80 டிஎம்சி தண்ணீரை சேமித்துவைக்க வேண்டியிருக்கும்.
அதேபோல, கிருஷ்ணா நடுவர்மன்றம் அளித்துள்ள தீர்ப்பின் சாதகபாதகங்கள் குறித்தும் சட்டவல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும். காவிரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுவிவகாரங்கள் மிகவும் சவாலானவை. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுப்போம். சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்தபிறகு, சட்டப்பேரவை, சட்டமேலவை கட்சித்தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment