17.12.13

லோக்பால் மசோதா இன்று நிறைவேற்றம்?

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கமல்நாத்.

லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி கூட்டியிருந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாஜக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவை மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தருவதாகக் கூறின. இதையடுத்து, லோக்பால் மசோதா, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்பால் மசோதாவை நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்த மசோதா கடும் அமளிக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இம் மசோதாவுக்கு சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மசோதா மீது விவாதம் நடைபெறவில்லை.
மாநிலங்களவையில் கூச்சலுக்கும் மத்தியில்கூட மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று பாஜக ஆதரவு தெரிவித்திருந்தது. மாநிலங்களவையில் திங்கள்கிழமை இம் மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலா ஞாயிற்றுக்கிழமை காலமானதால் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை அலுவல் திங்கள்கிழமை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, மசோதாவை அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் சுமுகமாக நிறைவேற்றும் விதமாக மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
இதில், மாநிலங்களவை உறுப்பினர்கள் அருண் ஜேட்லி (பாஜக),
நரேஷ் குஜ்ரால் (சிரோமணி அகாலி தளம்), சஞ்சய் ரௌத் (சிவசேனை), வி. மைத்ரேயன் (அதிமுக), டெரிக் ஓ பிரேயன் (திரிணமூல் காங்கிரஸ்), என்.கே. சிங் (ஐக்கிய ஜனதா தளம்), சீதாரம் யெச்சூரி (சிபிஎம்), டி.ராஜா (சிபிஐ), ரகுவம்ச பிரசாத் சிங் (ஆர்ஜேடி) ஆகியோர் கலந்து கொண்டனர். எனினும், கூட்டத்தில் சமாஜவாதி கட்சி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.
லோக்பால் மசோதாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் பங்கேற்கவில்லை. அதேபோன்று, திமுகவும் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தில்லியில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டமும் அதேநேரத்தில் நடைபெற்றதால் பங்கேற்க முடியாமல் போனதாக பகுஜன் சமாஜ் கட்சித்  தலைவர்கள் பிறகு தெரிவித்தனர்.
முன்னதாக, இக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற சம்மதம் தெரிவித்ததாகவும், லோக்பால் மசோதா தொடர்பாக பாஜக முன்வைத்த கோரிக்கையை ஏற்பதாக அரசு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் கோபால் யாதவ் கூறுகையில், "இந்த மசோதாவை நிறைவேற்ற எங்கள் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கும். எங்களது நிலைப்பாட்டில்  நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் அமைச்சரோ, உயர் அதிகாரியோ எந்தக் கோப்பிலும் கையெழுத்திட இயலாது. ஒட்டுமொத்த முடிவு எடுக்கும் நடைமுறையே ஸ்தம்பித்துவிடும்' என்றார்.
 பாஜக தலைவர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், "மசோதாவை நிறைவேற்றும் விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசை ஆதரித்து வரும் சமாஜவாதி கட்சியை மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைக்க வைப்பதில் ஆளும் காங்கிரஸ் கட்சி எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. காங்கிரஸூக்குத் தேவைப்படும் நேரத்தில் ஆதரவு வாக்களிக்க முன்வரும் இதுபோன்ற கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு, லோக்பால் மசோதா என்று வரும் போது மட்டும் எதிர்ப்பது ஏன்? மத்திய அரசின் நோக்கம் தெளிவற்றதாக இருப்பதையே இது காட்டுகிறது' என்று குற்றம்சாட்டினார்.
"சமாஜவாதி கட்சியுடன் பேசுவோம்'   அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் கூறியதாவது:
சமாஜவாதி கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளன.
இதனால், மாநிலங்களவையில் இடையூறு மேற்கொள்ளாமல் இருக்க சமாஜவாதி கட்சியை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்வோம். செவ்வாய்க்கிழமை இந்த மசோதா நிறைவேற்றப்படும். லோக்பால், லோக் ஆயுக்த மசோதா 2011-இன் திருத்தப்பட்ட பதிப்பில் சேர்க்கப்படாத நாடாளுமன்ற நிலைக் குழுவின் இரு பரிந்துரைகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும். சில கட்சிகளின் வேண்டுகோளின்படி, செவ்வாய்க்கிழமை அவை நடவடிக்கையின் போது அவைக் காவலர்கள் அழைக்கப்பட மாட்டார்கள்' என்றார் கமல்நாத்.

No comments:

Post a Comment