17.12.13

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெற வேண்டும்: தமிழருவி மணியன்

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.
சென்னையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
தில்லியில் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தபோது மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகத்தான் வைகோ பேசினார். பாஜக கூட்டணியில் இடம்பெறுவேன் என்று வைகோ உறுதியளித்துள்ளார்.
ஆனால் பாஜக கூட்டணியில் திமுக, அதிமுக இடம்பெறக்கூடாது என்று ராஜ்நாத் சிங்கிடம் அவர் கூறியது உண்மை.தமிழக பாஜகவில் உள்ள சிலர் வைகோ கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்று கூறுகின்றனர். மோடி அலை வீசும் நேரத்தில் பாஜகவினர் மூடிமூடியிட்டு பேசக்கூடாது. தமிழகத்தில் மொத்தம் 48 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இளைஞர்கள், படித்தவர்கள். புதிய தலைமுறையினர் ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தையே விரும்புகின்றனர்.
அதனால் மோடிக்கு 8 சதவீத வாக்குகளும், பூரண மதுவிலக்கு கோரி நடைப்பயணம் சென்றதால் மதிமுகவுக்கு 8 சதவீத வாக்குகளும், தேமுதிகவுக்கு 8 சதவீத வாக்குகளும், பாமக 8 சதவீத வாக்குகளும் உள்ளன. மொத்தம் 32 சதவீத வாக்குகள் வருகின்றன.
இந்த வாக்குகள் வேறு கட்சிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால் பாமகவும், தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். ராமதாûஸ கடந்த மாதம் சந்தித்துப் பேசினேன். அப்போது தனித்தே போட்டியிடப் போவதாகவும், ஆனால் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடிக்கே ஆதரவு என்று கூறினார்.
அதன் பிறகு பாஜகவுடன் பாமகவுக்குக் கூட்டணி ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் எனக்கு அந்தத் தகவல் இல்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்தை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். அதிமுகவுடன் பாஜக சென்றுவிட்டால் என்ன ஆவது என்று அவர் சந்தேகம் எழுப்பினார். இந்தச் சந்தேகத்துக்குப் பதில் அளிக்க வேண்டியது பாஜகதான் என்று அவரிடம் கூறினேன்.
ஒரு கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளருக்கு இடம் இல்லை என்று இல.கணேசன் கூறியுள்ளதால், இனி அதிமுக பாஜக கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அதன் பிறகு இரண்டாம் முறை விஜயகாந்த்தை சந்தித்தபோது, கூட்டணி அறிவிப்பை ஜனவரி மாதம் மாநாடு நடத்தி, மக்களின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார். எனவே பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. இணைய வேண்டும் என்றார் தமிழருவி மணியன்.

No comments:

Post a Comment