17.12.13

திமுக - மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: ஜி.ராமகிருஷ்ணன்



மக்களவைத் தேர்தலில் திமுக ஆதரவு நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதால் மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த நிலையில் கூட்டணி வாய்ப்பு குறித்து "தினமணி' செய்தியாளரிடம் ஜி.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை கூறியது: 
ஏற்காடு இடைத்தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவு தர முடியாது என்று கூறியதற்கு என்னென்ன காரணங்கள் கூறினோமோ, அந்தக் காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.
காங்கிரஸின் தவறான நவீன தாராளமய கொள்கைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு துணையாக இருந்தது திமுகதான்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம், புதிய பென்ஷன் திட்டங்கள், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்றவற்றை செயல்படுத்துவதற்கு திமுக துணை போனது.  மத்திய அமைச்சரவையில் இருந்தும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் விலகிய பிறகுதான் உணவு பாதுகாப்பு மசோதாவை அக்கட்சி ஆதரித்தது. எனவே காங்கிரஸ் செய்த தவறுகளில் இருந்து திமுகவைப் பிரித்துப் பார்க்க முடியாது.
2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை காங்கிரஸின் தூண்டுதலின்பேரில்தான் சிபிஐ விரைவுபடுத்தியது என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. காங்கிரஸ் அரசு அமைதியாக இருந்த நேரத்தில், உச்சநீதிமன்றமே அலைக்கற்றை ஊழலைக் கையில் எடுத்துக் கொண்டு விரைவுபடுத்தியது. எனவே இதுபோன்ற காரணங்களால் திமுக ஆதரவு நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment