17.12.13

தமிழகத்துக்கு ரூ. 41,408 கோடி மானியம் தேவை: நிதிக் குழுவிடம் ஜெயலலிதா கோரிக்கை


சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 14-வது நிதிக் குழுவின் கூட்டத்தில் நிதிக்குழுத் தலைவர் டாக்டர் ஓய்.வி. ரெட்டிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா.

முக்கியத் துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்காக ரூ.41 ஆயிரத்து 408 கோடியை மானியமாக தமிழகத்துக்கு வழங்கவேண்டும் என்று 14-வது நிதிக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளாட்சி, எரிசக்தி, காவல் போன்ற துறைகளில் செயல்படுத்தப்படும் முக்கியத்  திட்டங்களையும், அதற்குத் தேவைப்படும் மானியங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
ஒய்.வி.ரெட்டி தலைமையிலான 14-வது நிதிக்குழு தமிழகத்தில் முகாமிட்டுள்ளது. பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் அந்தக் குழு இரண்டு நாள்களில் ஆலோசனை நடத்துகிறது. முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:
அரசியலமைப்புச் சட்டம் தோற்றுவிக்கப்பட்டு 63 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியா இப்போது மிகவும் நம்பிக்கையான, ஜனநாயகத்தில் மிகவும் முதிர்ந்த நாடாகவும் திகழ்கிறது. ஆனாலும், பொருளாதார சவால்களை நாம் இன்றும் எதிர்கொண்டு வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை.
தாராளமய பொருளாதாரத்தால் மிகப்பெரிய தொழில்சார் நிறுவனங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. இதுபோன்ற தொழில் நிறுவனங்களுக்கு பொருளாதாரம் சார்ந்த கொள்கைகளை மத்திய அரசு வகுத்துக் கொடுக்கிறது. ஆனால், அந்த நிறுவனங்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன.
குறிப்பாக, சட்டம்-ஒழுங்கை பேணுவதில் தொடங்கி உட்கட்டமைப்பு வசதிகள் வரை அனைத்தையும் மாநில அரசுகளே உருவாக்கிக் கொடுக்கின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள், மத்திய அரசு அளிக்கும் அனுமதியைமட்டும் நம்பி மாநிலங்களில் தொழில் தொடங்க முன்வருவதில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தரமான சாலைகள், மின்சாரம், மக்களின் கல்வியறிவு, உட்கட்டமைப்பு போன்ற வசதிகளை மனதில் கொண்டே தொழில் தொடங்குகின்றன.
முக்கிய வளர்ச்சித் திட்டங்கள்: ஏழை மக்களுக்கு பயனளிக்கும் பல சிறப்பான திட்டங்களை தமிழக அரசே நேரடியாகச் செயல்படுத்தி வருகிறது. பல சிறப்பான திட்டங்களை அளிப்பதில் தமிழக முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
குறிப்பாக, சத்துணவுத் திட்டத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். மேலும், முதியோர் ஓய்வூதியம், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இலவச அரிசி போன்ற பல புதுமையான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தின் நிர்வாகத் தரத்தை உயர்த்தவும் சில சிக்கல்களைத் தீர்க்கவும் மத்திய அரசு மானியங்களை வழங்கிட வேண்டும். அதன்படி, தரம் உயர்த்தப்பட்ட 14 திட்டங்களுக்கும், 10 புதிய திட்டங்களுக்குமாக மொத்தம் ரூ.41 ஆயிரத்து 408 கோடி நிதியை மானியமாக வழங்கிட வேண்டும். இதில் சில முக்கியத் திட்டங்களை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
அவை: காவல் துறையில் நவீன வகை கருவிகளை வாங்குவதும், ஏற்கெனவே உள்ள தொழில்நுட்பங்களை தரம் உயர்த்துவதும் அவசியமாகும். மேலும், காவலர்களின் வீடுகள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருப்பது முக்கியம். இதற்காக புதிய திட்டங்களைச் செயல்படுத்த ரூ.3 ஆயிரத்து 825 கோடி மானியம் தேவை.
வீடுகள் கட்டும் திட்டம்: நாட்டில் நகரமயமாக்கல் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஏராளமான மக்கள் நகரத்துக்கு இடம்பெயர்வதும், நகரங்களில் வீடுகளின் விலை அதிகளவு இருப்பதும் குடிசைகள் பெருகுவதற்கு காரணமாகி விட்டன.
இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக, ரூ.7 ஆயிரத்து 150 கோடி மானியம் தேவைப்படுகிறது.
மின்சாரம்: காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இப்போது சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கென தனியாக கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறை மூலம் தமிழகத்தில் 7 ஆயிரத்து 504 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அளவுடன் சூரிய ஒளி மூலம் உற்பத்தியாகும் மின்சாரமும் சேர்க்கப்படும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகையாகும்.
ஆனால், இந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அதிக செலவாகிறது. இதற்காக, நிதிக் குழுவின் உதவியை நாடுகிறோம். இந்தத் திட்டத்துக்காக ரூ.2 ஆயிரத்து 250 கோடியை மானியமாக வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு அநீதி: பல்வேறு நிதிக் குழுக்கள் மூலமாக தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் எங்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதிக் குழு அதுபோன்று செய்யாமல் போதிய நிதியை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
இந்தக் கூட்டத்தில், நிதிக் குழுவின் உறுப்பினர்கள் சுஷ்மா நாத், கோவிந்த ராவ், தமிழக அமைச்சர்கள், நிதிக் குழுவின் செயலாளர் ஏ.என்.ஜா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை செயலாளர் க.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment