17.12.13

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: ரவி சுப்பிரமணியத்துக்கு ஜாமீன்

சென்னை, டிச. 16: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ரவி சுப்பிரமணியத்துக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம்:
காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002-ஆம் ஆண்டு சென்னையில் தாக்கப்பட்டார். இது தொடர்பாக காஞ்சி ஸ்ரீ ஜயேந்திரர், ரவி சுப்பிரமணியன் உள்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.  அவர்களில் ரவி சுப்பிரமணியன் அப்ரூவராக மாறினார். ஆனால், பின்னர் இவர் பிறழ் சாட்சியாக அறிவிக்கப்பட்டார். அதுபோல காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்ட ரவி சுப்பிரமணியன் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவி சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி சி.டி.செல்வம், நீதிமன்ற விசாரணைகள் அனைத்திலும் தவறாமல் ஆஜராக வேண்டும், ரூ. 10,000 பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ரவி சுப்பிரமணியத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment