கனிமொழிக்கு ஆதரவு கேட்டபோது, காங்கிரஸ் துரோகம் செய்தது என்று கருணாநிதிக்குத் தெரியாதா என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆவேசமாகக் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் திங்கள்கிழமை ஞானதேசிகன் கூறியது: திமுகவின் பொதுக்குழுவில் காங்கிரஸூடன் இனி கூட்டணி இல்லை என்று கருணாநிதி அறிவித்துள்ளார். கருணாநிதியின் அறிவிப்பால், காங்கிரஸ் ஆதங்கப்படவோ, வருத்தப்படவோ இல்லை.
ஆனால் அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிக்க வைத்து, ராசாவையும், கனிமொழியையும் சிறையில் அடைத்து, துரோகம் செய்தனர் என்று காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தினர். அலைக்கற்றை வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடக்கிறது.
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகுவதற்கு முன்பு காங்கிரûஸச் சேர்ந்த 3 மத்திய அமைச்சர்கள் கருணாநிதியைச் சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்தனர். கருணாநிதி வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் மேலிடத்தில் பேசிவிட்டு, கூறுவதாக தில்லி சென்றனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே, கூட்டணியில் இருந்தும் அமைச்சரவையில் இருந்தும் திமுக விலகுவதாக கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் இப்போது திடீரென, காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்று கருணாநிதி அறிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஆதரவைக் கேட்டார். அப்போது காங்கிரஸ் துரோகம் செய்தது என்று கருணாநிதிக்கு தெரியாதா?
ஏற்காடு தேர்தலில் காங்கிரஸ் ஆதரவை திமுக கேட்டது. அப்போது காங்கிரஸ் பழிவாங்கியது என்று தெரியாதா?
காங்கிரஸூக்கு தனித்து நிற்கும் பலம் உண்டு. கூட்டணி குறித்த முடிவை காங்கிரஸ் மேலிடம் பார்த்துக் கொள்ளும். புதிய கூட்டணி அமைந்த பிறகு அதை அறிவிப்போம் என்றார் ஞானதேசிகன்.
கூட்டணி முறிவு அறிவிப்பை வரவேற்கும் விதமாக சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸார் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
No comments:
Post a Comment