17.12.13

மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கான தடையை நீக்க வேண்டும்: ராமதாஸ்


மாட்டு வண்டிகளில் மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு பொதுப்பணித் துறை தடை விதித்துள்ளது. இது அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
ஆறுகளில் மணல் அள்ள பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித் துறையினரிடம் உரிமம் பெற்று, ஒரு வண்டி மணல் ரூ.60 என்ற விலையில் மாட்டு வண்டிகள் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
சிறிய அளவில் வீடு கட்டுபவர்கள், வீடுகளில் மராமத்துப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு குறைந்த அளவில் மணல் கிடைத்தாலே போதுமானது.
மேலும், இவர்களால் அதிக விலை கொடுத்து லாரிகளில் மணலை வாங்க முடியாது என்பதால், மாட்டு வண்டி மணலை வாங்கி வந்தனர்.
இதன்மூலம் இரு தரப்பினருமே பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பல மாதங்களாக கடுமையான வறுமையில் வாடுகின்றன.  அதனால் சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளும் தடைபட்டுள்ளன.
ஆறுகளில் மணல் அள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதித்தது. ஆனாலும் உரிய துறைகளிடம் அனுமதி பெற்று மணல் அள்ளிக்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் லாரிகளில் ஆற்று மணலை அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையால்தான் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுவது நம்பும்படியாக இல்லை.
அன்றாட பிழைப்புக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்களுக்கு தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து விற்பதை தொழிலாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பறிக்கக் கூடாது. மாட்டு வண்டிகளில் மணல் அள்ள பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தால் அதையும் நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment