17 December 2013 08:15 AM IST
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாமில், கொடைக்கானல் மலையில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வத்தலகுண்டில் நடைபெற்ற முகாமிற்கு கொடைக்கானல் உதவி வனப்பாதுகாவலர் பார்த்திபன் தலைமை வகித்தார். திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்ட மாவட்ட வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் முன்னிலை வகித்து பேசுகையில், தமிழகத்தில் உள்ள காடுகளில் 533 வகையான அபூர்வ தாவரங்கள் உள்ளன. யானைமலை அருகில் உள்ளதால் கொடைக்கானல், பழனி மலைத்தொடரில் அதிக அளவில் புலிகள் நடமாட்டம் உள்ளது.
2006இல் புலிகள் பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டில் 1875 ஆக உள்ளது. தற்போது இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மலைத் தொடரில் புலிகள் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. இந்த கணக்கெடுப்பில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கல்லூரி மாணவ- மாணவியர் என 500 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த கணக்கெடுப்பு 10 சதுர மீட்டராக வகுத்து, அதில் உள்ள புலிகளின் காலடி தடங்கள் கணக்கீடு செய்யப்படும்.
கொடைக்கானலில் நீர் நிலைகள் அதிகம் உள்ள டைகர் சோலா மற்றும் பேரிஜம் பகுதியிலும் புலிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். கீழ்மலைகளான தாண்டிக்குடி செம்பரான்குளம் ஆகிய பகுதிகளிலும் கணக்கெடுப்பு தொடங்கும். கொடைக்கானலில் வன உயிரின சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. இதில் மேல்மலை, கீழ்மலையில் வனச்சரணாலயத்தில் எவ்வளவு உயிரினங்கள் உள்ளது என்ற கணக்கெடுப்பும் நடத்தப்படும். தற்போது அகில இந்திய அளவில் கணக்கெடுப்பு ஒரே நேரத்தில் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில் தடங்களை சேகரிப்பது மற்றும் நடமாட்டத்தை கேமிரா மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.
முகாமில் வனத்துறை சரகர்கள் தேவதானபட்டி கருப்பையா, கொடைக்கானல் சக்திவேல், பேரிஜம் கணேஷ்ராஜ், வந்தரேவு விஜயக்குமார், பூம்பாறை சாவானுக்கான், பெரும்பாறை சேதுராமன், மன்னமனூர் விஜயக்குமார், கன்னிவாடி சுப்பையா, வத்தலகுண்டு கண்ணன், ஒட்டன்சத்திரம் பரதன், பழனி கணேசன் ஆகியோர் தலைமையில் வனத்துறை கண்காணிப்பாளர்கள் வனவர்கள் கலந்து கொண்டனர். மேலும் வேட்டை தடுப்பு பிரிவினரும் முகாமில் கலந்து கொண்டனர். இதில் கொடைக்கானல் அன்னை தெரசாள் பல்கலைக்கழக மாணவிகள் 40 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பயிற்சி பெற்றவர்கள் குழுவாக புலிகள் பற்றிய விவரங்களை சேகரிக்க அடர்ந்த வனப்பகுதியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
No comments:
Post a Comment