17.12.13

ஆறு மாதங்களில் மின்வெட்டு அறவே நீங்கும்: முதல்வர் ஜெயலலிதா உறுதி


மத்திய அரசின் அனல்மின் நிலையங்களால் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு அடுத்த ஆறு மாதங்களில் அறவே நீங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு வந்துள்ள 14-வது நிதிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது, மாநிலத்தின் மின்சார நிலைமை குறித்து பேசினார். அதன் விவரம்:
மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாட்டை தமிழக அரசு திறம்படச் சமாளித்து வருகிறது. மின்சார பற்றாக்குறைக்கு மாநில அரசு காரணமல்ல. கடந்த 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான எனது முதல் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மின்சாரம் உபரியாக இருந்தது. மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரையில் இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி நடைபெற்ற போதும், மின்சாரம் உபரியாகவே இருந்தது. எனது ஆட்சி முடியும் நிலையில் மாநிலத்தில் உபரியாக இருந்த மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவியது. இதற்குக் காரணம், கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு மின் திட்டங்களை அதற்குப் பிறகு வந்த திமுக ஆட்சி கண்டு கொள்ளாமல் புறக்கணித்ததுதான்.
இதன் விளைவாக, 2007-ல் தொடங்கி மின் தட்டுப்பாடு படிப்படியாக அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் மின் தட்டுப்பாட்டின் அளவு உயர்ந்திருந்தது.
மின்சார கொள்முதலில் கோளாறு: மின்சார கொள்முதலில் கடந்த திமுக அரசு மேற்கொண்ட தவறான நடைமுறையே இப்போது மின்சாரம் கொள்முதல் செய்ய முடியாத நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யாமல் உள்நோக்கத்துடனேயே குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
நீண்ட கால அடிப்படையில் மின்சாரக் கொள்முதல் என்ற நடைமுறையைப் பின்பற்றி இருந்தால், வெளிமாநிலங்களில் குறிப்பாக குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து நமக்குத் தர தயாராக இருந்த 500 மெகாவாட் மின்சாரத்தை எளிதாக கொண்டு வருவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இருந்திருக்கும். ஆனால், குறுகிய கால அடிப்படையிலான ஒப்பந்த நடைமுறையை திமுக அரசு பின்பற்றியதால் இப்போது வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு மின்சாரத்தைக் கொண்டு வர முடியவில்லை. பிற மாநிலங்களில் இருந்து வெறும் 100 முதல் 150 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கொண்டு வர முடிகிறது.
புதிய திட்டங்களுக்கு அனுமதியில்லை: புதிய மின்சாரத் திட்டங்களுக்கும் மத்திய அரசு வேண்டுமென்றே அனுமதி தர மறுக்கிறது. எடுத்துக்காட்டாக, குந்தா மற்றும் சில்லஹல்லா மின் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு தயாராக இருந்தும் அதற்கான ஒப்புதலை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.
மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் முழு அளவில் செயல்படாத காரணத்தால் இப்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் முழு அளவில் மின்சார உற்பத்தியைச் செய்து வருகின்றன. எனவே, மின்தட்டுப்பாட்டை போக்குவதில் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழகத்தில் மின்வெட்டு அறவே நீங்கும். மிகை மின் மாநிலமாக தமிழகம் விளங்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

No comments:

Post a Comment