தமிழகத்தில் ரூ.441.50 கோடியில் 10 ஆயிரத்து 867 புதிய குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி முறை மூலம் இந்தக் கட்டடங்களை அவர் திறந்தார். இது குறித்து, திங்கள்கிழமை அரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தின் நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த பல்வேறு வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் மறுகுடியமர்வு திட்டப்பணிகளை குடிசை மாற்றுவாரியம் செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியத்தின் பணிகள் முதலில் சென்னையிலும், பின்னர் தமிழகத்திலுள்ள இதர நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
10 ஆயிரத்து 867 குடியிருப்புகள்: சென்னை எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ரூ.228.60 கோடியில் 6 ஆயிரம் குடியிருப்புகள், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ரூ.106.11 கோடியில் 2 ஆயிரத்து 48 குடியிருப்புகள், நொச்சி நகரில் ரூ.45.39 கோடியில் 628 குடியிருப்புகள், கோவை மாவட்டம் அம்மன்குளத்தில் ரூ.23.44 கோடியில் 792 குடியிருப்புகள், புதுக்கோட்டை மச்சுவாடியில் ரூ.2.60 கோடியில் 96 குடியிருப்புகள், சந்தைப்பேட்டையில் ரூ.2.54 கோடியில் 84 குடியிருப்புகள், திருநெல்வேலி வ.உ.சி. நகரில் ரூ.5.54 கோடியில் 207 குடியிருப்புகள், தூத்துக்குடி துரைசிங் நகரில் ரூ.2.15 கோடியில் 78 குடியிருப்புகள், நாமக்கல்லில் ரூ.9.46 கோடியில் 342 குடியிருப்புகள், ஓசூரில் ரூ.5.10 கோடியில் 192 குடியிருப்புகள், சேலம் மாவட்டம் எருமாபாளையத்தில் 10.57 கோடியில் 400 குடியிருப்புகள் என மொத்தம் ரூ.441.50 கோடியில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரத்து 867 குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
சிறப்பு வசதிகள்: இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 270 முதல் 357 சதுர அடி கொண்ட பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்பு ஒவ்வொன்றிலும் ஒரு படுக்கை அறை, சமையலறையுடன் கூடிய ஒரு பல்நோக்கு அறை, குளியலறை, கழிப்பறை ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேவைக்கேற்ப சில இடங்களில் நூலகம், சிறு கடைகள், ரேஷன் கடைகள், ஆழ்துளை குழாய் கிணறு மற்றும் பூங்கா ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நீர்வழி கால்வாய் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கும், மீனவ குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment