24.12.13

ஜன.1 புதுவை அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வலியுறுத்தல்

புத்தாண்டு பிறப்பு நாளான ஜன.1-ம் தேதியை தமிழக அரசை போன்று புதுவை அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் துறை தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது :  ஒவ்வொரு ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு நாள் எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாளாகும். புத்தாண்டு பிறப்பையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வதும், வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபடுவதும் என பல்வேறு நிகழ்ச்சிகளடங்கிய நாளாக கடைபிடிக்கின்றனர்.
புதுச்சேரி அரசிதழல் 2014-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள் பட்டியலில் ஜன.1-ம் தேதி இடம்பெறவில்லை. தமிழக அரசு அந்நாளை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. ஜன.1-ம் தேதியில் அவரவர் மதத்துக்குள்பட்ட வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக வெளியூருக்கு செல்லக்கூடியவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். பொதுவாகவே இந்த நாள் எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியாக இருக்கும் நாளாக இருக்கும்போது, அரசு அலுவலகங்கள் இயங்குவது, பள்ளிகள் இயங்குவது போன்றவை மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, புதுச்சேரி அரசு ஜன.1-ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்க முன்வரவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment