ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகிவிட்டது. அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை.
இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப் பெருமைப்படுத்துவதாகவே இருக்கும்.
இப்போது அதிகமாக உலாவரும் ஒரு ரஜினி துணுக்கு இது.
ஒரு முறை அமிதாப் ரஜினியிடம் கேட்டார்... 'ரஜினி, உலகில் உங்களுக்குத் தெரியாத ஆளே கிடையாது என்கிறார்களே.. நிஜமா...'
'எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க... சரி, ஏதாவதொரு ஒரு ஆள் பேர் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சவரான்னு பார்ப்போம்..."
அமிதாப் கொஞ்சம் கடுப்புடன், "டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?"
'ஓ! என் பழைய நண்பராயிற்றே. வாங்க நேர்லயே போய்ப் பார்க்கலாம்...' என்றார் ரஜினி.
இருவரும் ஹாலிவுட் சென்று, ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத் தட்டினர்.
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார், 'தலைவா,வாங்க வாங்க. நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்'.
அமிதாப் அசந்து போனார். ஆனாலும் சந்தேகம். 'அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா ரஜினி?' என்று
ரஜினி சொன்னார் "நன்றாகத் தெரியும்".
இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.
ரஜினியைப் பார்த்த ஒபாமா சொன்னார், "என்ன ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி. ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். வாங்க ,காஃபி சாப்பிடுவோம்; கூட்டம் கிடக்கட்டும் !"
அமிதாப் ஆடிப் போனார்.
இருந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல் கேட்டார்.. "போப்பைத் தெரியுமா?"
ரஜினி சொன்னார்... "போப்பை நன்றாகத் தெரியும். பாபாஜி வழியில் தொடர்புண்டு," என்றார்.
இருவரும் வாடிகன் சென்றனர்.
போப்பைப் பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. ரஜினி சொன்னார். "அமிதாப்ஜி, இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது. நான் காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன், பாருங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி. திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு ஒரு சிறிய நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
"என்ன ஆச்சு?" ரஜினி கேட்டார்.
அமிதாப் சொன்னார். "ஒப்புக்கிறேன் ரஜினி.. உலக சூப்பர் ஸ்டார் நீங்க. நீங்க போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின் அருகில் நின்ற ஒரு வெள்ளைக்காரர் கேட்டார், "பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?!"
No comments:
Post a Comment