24.12.13

மீனவர் பிரச்னை: பிரதமரை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்- ராமதாஸ்



தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 140 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் டிசம்பர் 11,12-ஆம் தேதிகளில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இவர்கள் தவிர மேலும் 70 மீனவர்கள் ஏற்கெனவே இலங்கைச் சிறை
களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது 70 படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியல் கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுவித்தன.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  பிரதமருக்குக் கடிதம் எழுதுவதுடன் தம் கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா நினைக்கிறார். இதுவரை 35 முறை பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்களை மீட்கக் கோரி, நாகையைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள்  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனவே இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் முதல்வர் ஜெயலலிதா தில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment