இலங்கை சிறைகளில் வாடும் 210 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மீனவ சங்கங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். சுமார் 20 நிமிஷங்கள் வரை நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு, மீனவ பிரதிநிதிகள் அளித்த பேட்டி:
வீரமுத்து (அக்கரைப்பேட்டை): இலங்கை படையினர் பிடித்துச் சென்ற 72 விசைப் படகுகள் மற்றும் 210 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசிடம் கூறி நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் தெரிவித்தார். இலங்கை மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை அமைத்துக் கொடுக்கவும் விரைவில் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
உண்ணாவிரதத்தை முடிப்போம்: மீனவர்களை விடுவிக்க நடந்து வரும் உண்ணாவிரதத்தை முடிப்பது பற்றி அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுப்போம். பிரச்னையைத் தவிர்ப்பதற்கு, இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் மீன் படிப்பதற்கான கால வரையறையை நிர்ணயிக்கவேண்டும்.
ஜேசு ராஜா (தமிழக கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கம்-ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்): பாரம்பரிய இடத்தில் பிரச்னையின்றி மீன் பிடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். இலங்கைச் சிறையில் இருந்து மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
முதல்வருடனான சந்திப்பின்போது, மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment