24.12.13

கரும்புக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் தேவை: ஜி.ராமகிருஷ்ணன்



கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கரும்புக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்தபடி ரூ.1,700-ம், தமிழக அரசின் பரிந்துரை விலை ரூ.650-ம் சேர்த்து டன்னுக்கு மொத்தமாக ரூ.2,350-ஐ விவசாயிகள் பெற்றனர். இந்த ஆண்டு மத்திய அரசு டன் ஒன்றுக்கு ரூ.400 உயர்த்தியுள்ளது. இதனைச் சேர்த்தால் இந்த ஆண்டு கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,750 கிடைக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு டன்னுக்கு ரூ. 2,650 என நிர்ணயித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசின் பரிந்துரை விலையாக இருந்த ரூ. 650-ல் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. இது கரும்பு விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பரிந்துரை விலையில் ரூ. 100 குறைக்கப்பட்டிருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை.
எனவே தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து பரிந்துரை விலையை உயர்த்தி கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment