இந்திய-இலங்கை மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னைக்கு மத்திய அரசு முக்கியத்துவமளித்து வருகிறது. இலங்கை மீனவர்கள் 203 பேர் இந்தியாவின் பல்வேறு பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
திரிகோணமலையிலும் மற்ற சிறைகளிலும் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவ கொழும்பிலுள்ள துணைத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கும், திரிகோணமலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கும் உணவு மற்றும் தேவையான மருந்து போன்றவை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு தரப்பு மீனவர்களையும் சென்னையில் அழைத்து பேச்சுவார்த்தையைத் தொடங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அதிகாரிகளை மத்திய அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது வரவில்லை. இதனால் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி மத்திய அரசு புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, உடனடியாக தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவிசெய்யத் தயாராக இருக்கிறது. இதனை கால தாமதம் செய்யாமல் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கான இடத்தையும், நேரத்தையும் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தல் கூட்டணியை தேசிய தலைமை முடிவு செய்யும். அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள பொறுப்பாளர்கள், எங்களை அணுகும் கட்சிகள் குறித்து மத்திய தலைமைக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம்.
ஜெயந்தி நடராஜன் மூத்த அமைச்சராக இருந்தவர். தேர்தலுக்காக கட்சிப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளவே பதவியிலிருந்து விலகியிருக்கிறார் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.
No comments:
Post a Comment