16.12.13

தீவிரவாத ஊடுருவலுக்கு உதவிய வழக்கு: துன்டா உள்பட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

இந்தியாவுக்குள் பாகிஸ்தான், வங்கதேச பயங்கவாதிகள் ஊடுருவ உதவி செய்த குற்றச்சாட்டில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துன்டா மற்றும் மூன்று பேர் மீது தில்லி நீதிமன்றத்தில் சிறப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தயா பிரகாஷ் முன் அப்துல் கரீம் துன்டா, அவரது மாமனார் முகமது சக்கரியா, அவர்களது இரு நெருங்கிய கூட்டாளிகள் அலாவுதீன், பஷீருதீன் ஆகியோர் மீது, தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 121, 121-ஏ மற்றும் வெடிபொருள் சட்டம், வெளிநாட்டவர் சட்டம், ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சிறப்புப் பிரிவு போலீஸார் கூறுகையில், "அலாவுதீனும், பஷீருதீனும் கடந்த 1994-ஆம் ஆண்டு சக்கரியா மூலம் துன்டாவை சந்தித்தனர். அதன் பிறகு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். துன்டாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே மற்ற மூன்று பேரும் 1997-இல் இந்தியாவில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு உதவியுள்ளனர். இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 1998-ஆம் ஆண்டு பாகிஸ்தானியர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்' என்றனர்.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த துன்டா வெடிகுண்டு நிபுணர். 72 வயதாகும் இவர் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான துன்டா உள்ளிட்ட 20 பேரை ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் அரசை இந்தியா கோரியிருந்தது.
இந் நிலையில், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி இந்திய-நேபாள எல்லையில் அப்துல் கரீம் துன்டாவை போலீஸார் கைது செய்தனர். நாடு முழுவதும் நிகழ்ந்த 40 குண்டுவெடிப்பு சம்பவங்களில் துன்டாவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பாக மேற்கு வங்கத்தில் சிறையில் தனித் தனியாக அடைக்கப்பட்டுள்ள சக்கரியா, அலாவுதீன், பஷீருதீன் ஆகிய மூவரையும் நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அவர்கள் மூவரையும் போலீஸார் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
1997-ஆம் ஆண்டு தில்லியில் சதர் பஜார் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கிலும் துன்டா மீது போலீஸார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment