தமிழகத்தில் இலவசங்களை ஒழிக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட பிறகு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இதைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது:
மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இலங்கைப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதங்கள் மட்டும் அனுப்பி வருகிறது.
ஆனால், மத்திய அரசு இலங்கை நட்பு நாடு என்கிறது. போர்க் கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு பரிசாக வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.
தமிழக திராவிடக் கட்சிகளுக்கு எவ்வித நிலைப்பாடும் இல்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சி மக்களுக்கு எரிச்சலை மட்டுமே அளித்துள்ளது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி முன்னுதாரணமாக உள்ளது.
மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக விஜயகாந்திற்கு வாக்களித்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இலவசங்களை ஒழிக்க வேண்டும். புரட்சியால் மட்டுமே ஆட்சியை சரி செய்ய முடியும். மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார் சீமான்.
விழாவில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் முத்துராம், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment