மணல் இரண்டாம் விற்பனையில் அரசே நேரடியாக ஈடுபட வேண்டும். இதில், மாவட்ட அளவில் தனிநபருக்கு ஒப்பந்தம் அளிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
குவாரிகளில் யூனிட்டுக்கு ரூ.315 வீதம் செலுத்தி மணலைப் பெறும் மணல் லாரி உரிமையாளர்கள் பயனாளிகளுக்கு மிக அதிக விலைக்கு விற்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, மாவட்டந்தோறும் மணலை இருப்பு வைத்து, இரண்டாம் விற்பனை செய்திட மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தனிநபருக்கு பொதுப் பணித் துறை மூலம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய நடைமுறைக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் கூறித்து சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறியது:
மணல் விலையேற்றத்துக்கு மணல் லாரி உரிமையாளர்களே காரணம் என அரசு கூறுவது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாகும். தமிழகத்தில் மொத்தமுள்ள 137 குவாரிகளில் 15ஐ தவிர மற்றவை மூடப்பட்டதால் ஏற்பட்ட மணல் தட்டுப்பாடே விலையேற்றத்துக்கு காரணமாகும். மணல் விலையேற்றத்தைத் தடுக்க உடனடியாக மூடப்பட்டுள்ள குவாரிகளை திறக்கவும், புதிய குவாரிகளைக் கண்டுபிடித்து தட்டுப்பாடின்றி மணல் கிடைக்கச் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலையேற்றத்தைக் காரணம்காட்டி மணல் இரண்டாம் விற்பனையில் மாவட்ட அளவில் தனிநபர்களுக்கு அனுமதி வழங்குவது தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மணல் லாரிகளின் வேலையிழப்புக்கு வழிவகுக்கும். எனவே, "அம்மா' உணவகம், "அம்மா' குடிநீர் போன்று மணல் விற்பனையிலும் பொதுப் பணித் துறை மூலமாக அரசே நேரடியாக ஈடுபட வேண்டும். இதனால், ஒப்பந்த அடிப்படையில் மணல் லாரிகளுக்கு உரிய வாடகை கிடைக்க வழிவகை ஏற்படும்.
தவிர, குவாரிகளில் நாளொன்றுக்கு ஒரு லாரிக்கு 2 யூனிட், டாரஸ் லாரிகளுக்கு 3 யூனிட் என்ற அரசாணையை முறையாக அமல்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மணல் இரண்டாம் விற்பனையில் தனிநபருக்கு அனுமதி வழங்குவதை ஏற்க மாட்டோம்.
இந்தக் கோரிக்கைகளை அரசு ஏற்காவிடில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை (டிச.17) சம்மேளனம் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிக்கும் என்றார் அவர்.
No comments:
Post a Comment