வரும் மக்களவைத் தேர்தலில் ராகுலை பிரதமராக்க தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் சபதமேற்று பணியாற்ற வேண்டும் என அகில இந்திய பொதுச்செயலாளர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் அவர் பேசியது:
தமிழகத்தில் புதிய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில் பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இங்கே, பல காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் பட்டியலில் தங்களது பெயர்கள் விடுபட்டதைக்கூறிச் சென்றனர். இவர்களது பெயர்கள் பட்டியலில் இல்லை என்பதற்காக, பதவியில் இருப்பவர்கள் தான் முக்கியமானவர்கள் என்று எண்ண வேண்டாம்.
இப்போது பதவி கிடைக்காதவர்கள் அனைவருமே, அந்தந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் தான். இவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர். இவர்களுக்கும் விரைவில் கட்சிப் பதவி தேடிவரும். அதுவரை காத்திருக்க வேண்டும். அதேசமயம், விரைவில் மக்களவைத் தேர்தல் வர இருக்கிறது. தேர்தலில் பதவி கிடைத்தவர்களும், பதவி கிடைக்காதவர்களும் ஒருங்கிணைந்து கட்சியின் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் ராகுலைப் பிரதமராக்க வேண்டும் என அனைவரும் சபதமேற்கொண்டு பணியாற்ற வேண்டும், என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியது: திருநாவுக்கரசர் பேசியபோது புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்துப் பேசினார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் ஒருசிலருக்கு மட்டுமே கட்சிப்பதவி கிடைத்துள்ளது. பலருக்கு பதவி கிடைக்கவில்லை என்பதை நான் அறிவேன். பதவி என்பது சிலருக்கு மட்டுமே கொடுக்க முடியும். எல்லோரும் பதவிக்கு தகுதியானவர்கள் தான். அவ்வப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிப் பதவிக்கான நியமனங்கள் செய்யப்படுகின்றன. பதவி கிடைத்தவர்களுக்கு முதல்மரியாதை என்றால், பதவி கிடைக்காதவர்களுக்கு முக்கிய மரியாதை கொடுக்கப்படும்.
பதவி கிடைக்காதவர்களுக்கு, பதவியில் இருப்பவர்கள் மரியாதை கொடுத்தால் தான் கட்சி வளரும் என்றார்.
No comments:
Post a Comment