16.12.13

பலவீனமான லோக்பால் மசோதாவை ஏற்க மாட்டோம்: அரவிந்த் கேஜரிவால்


"மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா பலவீனமானது; பயனற்றது. இந்த மசோதாவால் காங்கிரஸ் கட்சியைத் தவிர யாருக்கும் பயன் இருக்காது' என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். மேலும், இந்த மசோதா விவகாரத்தில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் நிலைப்பாடு கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வடிவிலேயே லோக்பால் மசோதவை நிறைவேற்றலாம்' என்று அண்ணா ஹசாரே கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அரவிந்த் கேஜரிவால் கூறியது:
மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா பலவீனமானது. இந்த மசோதா யாருக்கும் பயன் தராது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே பயனடையும். லோக்பால் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தை அண்ணா ஹசாரே முடித்துக் கொள்வார். இந்த மசோதா விஷயத்தில் அவரது நிலைப்பாடு எனக்குக் கவலை அளிக்கிறது. இந்த மசோதாவால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு தண்டனைகூட அளிக்கப்படாது என்பதை உறுதியாகக் கூற முடியும்.
இந்த மசோதாவால் காங்கிரஸýம், அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மட்டுமே பயன்பெறுவர். மத்திய புலனாய்வுத் துறையை (சிபிஐ) சுதந்திர அமைப்பாக மாற்றுவது குறித்து இந்த மசோதாவில் ஏதும் இல்லாத வரை, ஊழல் வழக்குகளில் ஒருவருக்குக்கூட தண்டனை அளிக்கப்படாது.
மத்திய புலனாய்வுத் துறையின் 50 ஆண்டு கால வரலாற்றில், சிபிஐ அமைப்பால் அரசியல் தலைவர்கள் நான்கு பேருக்கு மட்டுமே தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. எந்த அரசியல் தலைவர்கள் மீது விசாரணை நடத்துகிறார்களோ, அதே தலைவர்களிடம்தான் மத்திய புலனாய்வுத் துறையினர் அறிக்கை அளிக்கும் யதார்த்த நிலைதான் இதற்குக் காரணம்.
சிபிஐ சுதந்திரமான அமைப்பாக இருந்திருந்தால், 2ஜி வழக்கிலோ அல்லது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கிலோ பிரதமர்கூட சிறையில் தள்ளப்பட்டிருந்திருக்கலாம். தற்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா பலவீனமானது. இது ஊழலைத் தடுக்காது. ஆனால், அதற்குப் பதிலாக ஊழலைப் பாதுகாக்கும். கடந்த 2011, ஆகஸ்ட் 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதாவில் லோக்பாலுக்கான சுதந்திரமான விசாரணை அமைப்புக்கான ஷரத்து இருந்தது. ஆனால், தற்போது பலவீனமான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஜன்லோக்பாலுக்காக எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.
ஹசாரேவின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அளித்த மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்ற நாடாளுமன்றம் தவறிவிட்டதை மக்களிடம் எடுத்துச் சொல்வோம் என்றார் அரவிந்த் கேஜரிவால்.

பதிலுக்காக காத்திருக்கிறோம்
தில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆதரவு அளிக்க முன்வந்த காங்கிரஸ், பாஜகவிடம் விஐபி கலாசாரத்திற்கு முடிவு கட்டுவது, வலுவான லோக் ஆயுக்த அமைப்பது உள்பட 18 நிபந்தனகளை ஆம் ஆத்மி கட்சி முன்வைத்திருந்தது. அவர்களின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
எங்களது நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டவை. ஒத்தகருத்து அரசியலை உருவாக்க நான் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். நாங்கள் பொறுப்பிலிருந்து விலகி ஓடமாட்டோம். இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க தங்களது ஆதரவைத் தர தயார் என்று கூறியதால்தான் அவற்றின் நிலைப்பாட்டை நிபந்தனைகள் மூலம் கோரியுள்ளேன். காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாகக் கூறியிருந்தது. பாஜக ஆக்கப்பூர்வமான ஆதரவை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. காங்கிரஸýம், பாஜகவும் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தங்களது பதிலை உரிய முறையில் அளிக்க முன்வர வேண்டும்.
நாங்கள் வைத்துள்ள நிபந்தனைகள் தொடர்பாக காங்கிரஸ், பாஜக பதில் அளித்த பிறகு, அதை தில்லியில் உள்ள 270 வார்டுகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு செல்வோம். நாங்கள் அரசு அமைக்க வேண்டுமா?, வேண்டாமா? என்பதற்கான மக்கள் கருத்தைப் பெறுவோம். மக்கள் எங்களை ஆட்சி அமைக்குமாறு கேட்டுக் கொண்டால் அதன் பிறகு ஆட்சி அமைப்போம் என்றார் அரவிந்த் கேஜரிவால்.

No comments:

Post a Comment