14.12.13

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்


வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை (39) அந்நாட்டுப் போலீஸார் பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தனர். பிணைத் தொகையாக ரூ. 15 லட்சம் செலுத்திய பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தூதரக உறவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க போலீஸாரின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சங்கீதா ரிச்சர்ட் என்பவர், அமெரிக்காவில் துணைத் தூதராக உள்ள தேவயானி வீட்டில் பணிப்பெண்ணாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பணியாற்றியுள்ளார். பின்னர் தலைமறைவாகிவிட்ட அந்தப் பெண், "தேவயானி முறைகேடாக தனக்கு விசா பெற்றதாகவும், உறுதியளித்தபடி சம்பளம் தரவில்லை' என்றும் அமெரிக்க போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
தேவயானிக்கு எதிராக இந்தியாவுக்கு வெளியே சங்கீதா ரிச்சர்ட் எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என தில்லி உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தேவயானி தனது மகளை வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பள்ளியில் இறக்கிவிடும் போது அமெரிக்க போலீஸாரால் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை கையில் விலங்கிட்டு பொது மக்கள் முன்னிலையில் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
பின்னர், அவர் மன்ஹட்டன் நீதிமன்றத்தின் நீதிபதி டேப்ரா ஃப்ரீமேன் முன்னிலையில் மதியம் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 11 பக்கங்கள் கொண்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "மாதந்தோறும் ரூ. 30 ஆயிரம் சம்பளமும், வாரத்துக்கு 40 மணி நேரம் பணி என்றும் பணிப்பெண் சங்கீதாவுடன் தேவயானி ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால். அந்தப் பணிப்பெண்ணுக்கு குறிப்பிட்டதைவிட குறைவான ஊதியம் வழங்கியதுடன் கூடுதல் நேரம் வேலையும் வாங்கியுள்ளார். மேலும், பணிப்பெண் சங்கீதாவுக்கு அமெரிக்கா விசா பெறுவதற்கு தவறான தகவல்களையும் தேவயானி அளித்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கும் போது, இந்திய துணைத் தூதர் தேவயானி நீதிமன்றத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தேவயானியின் வழக்குரைஞர் மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, தேவயானி ரூ. 15 லட்சம் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றார். தேவயானி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க அமெரிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த விழக்கின் விசாரணை அதிகாரி சுனிதா திவான் கூறுகையில், "இந்தக் கைது நடவடிக்கை துரதிருஷ்டவசமானது. இருப்பினும், இந்திய துணைத் தூதர் தேவயானி தனிப்பட்ட முறையில் தனது சொந்த வேலைக்காக பணிப்பெண் சங்கீதாவை பணியமர்த்தி உள்ளார். ஆகையால், இந்த வழக்கில் தூதரக அதிகாரி என்ற அடிப்படையிலான பாதுகாப்பைப் பெற இயலாது' என்று கூறினார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்த கைது குறித்து மும்பையில் உள்ள தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே கூறுகையில், "அமெரிக்க போலீஸாரின் இந்த நடவடிக்கை இனவெறி அடிப்படையிலானது.
இந்தியர் என்பதால் என் மகளைக் கொடுமைப்படுத்தும் நோக்கில் நடைபெற்றுள்ள சதி வேலை இதுவாகும். இதன்மூலம் இந்திய அரசின் மதிப்பும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கு அமெரிக்க போலீஸார் மன்னிப்பு கோர வேண்டும்' என்று தெரிவித்தார்.

அமெரிக்க தூதருக்கு சம்மன்

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டிருப்பதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சுஜாதா சிங், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பவெலுக்கு சம்மன் அனுப்பி, தில்லியில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைத்து இந்தியா சார்பில் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.
"ஒரு நாட்டின் உயர் அதிகாரி அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ள விதம் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இந்தச் செயல் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. தூதரக அதிகாரிகளுக்கு உரிய மரியாதையுடன் தேவயானி நடத்தப்பட்டிருக்க வேண்டும்' என்று நான்சியிடம் சுஜாதா சிங் கண்டிப்புடன் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் "இந்தப் பிரச்னைக்கு சட்டப்பூர்வமாக உடனடியாகத் தீர்வுகாண இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், ஒரு நாட்டின் தூதரகப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள இளம் பெண் அதிகாரியை, இரண்டு சிறு குழந்தைகளின் தாயாரை, அமெரிக்க அதிகாரிகள் அவமரியாதையாக நடத்தியுள்ள விதம் சற்றும் ஏற்றுக்கொள்ள இயலாதது' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment