14.12.13

முன்னாள் மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் பாஜகவில் இணைந்தார்



முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தார்.
அவருடன், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் சுஷில் சாஸ்திரி, பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் ராகவ் ஷரண் பாண்டே மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி தரம் சிங் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஆர்.கே.சிங் கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாத ஒரே கட்சி பாஜகதான். தேசியப் பாதுகாப்பில் பாஜக எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளில் நானும் என்னை இணைத்துக் கொள்கிறேன்.
பாஜகவும், அதனைச் சார்ந்த ஆர்எஸ்எஸ் போன்ற பிற அமைப்புகளும் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. மற்ற கட்சிகளோ தங்களது வாக்கு வங்கிக்காக சமரசம் செய்து கொள்வார்கள் என்று ஆர்.கே.சிங் கூறினார்.
"இந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் பாஜகவில் இணையும் முடிவைத்தான் எடுப்பார்கள். இது ஒரு ஆரம்பம்தான். வரும் காலங்களில் இன்னும் பலர் பாஜகவில் இணையப் போவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்' என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
ஆர்.கே.சிங் மத்திய உள்துறைச் செயலாளராக இருந்தபோது, ஆர்எஸ்எஸ் மற்றும் அதனைச் சார்ந்த அமைப்புகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி இருந்தது நினைவுகூரத்தக்கது. தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு பாஜகவில் இணைந்துள்ளார்.

No comments:

Post a Comment