14.12.13

கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்



கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதே சமயம், லாலு பிரசாதை ஜாமீனில் விடுவிக்க நிபந்தனைகள் விதிக்கும் முடிவை விசாரணை நீதிமன்றமே எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, லாலு பிரசாதை ஜாமீனில் விடுதலை செய்ய சிபிஐ ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று அத்துறையின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
"வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட பலரும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில் தீர்ப்பு வழங்க தாமதமாகும் என்ற லாலு பிரசாத் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. மேலும், அவர் ஏற்கெனவே சில மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். அந்த அடிப்படையில் லாலு பிரசாதை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிடுகிறோம்' என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
முன்னதாக, 1990-களில் பிகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் இருந்தபோது, கால்நடை தீவன ஊழல் வழக்கில் ரூ. 37.7 கோடி முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அதில் லாலு பிரசாத் உள்பட 44 பேரும் குற்றவாளிகள் என்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதையடுத்து ராஞ்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் உள்ளிட்டோர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். அதைத் தொடர்ந்து, தண்டனை பெற்ற 44 பேரில் 37 பேர் ஏற்கெனவே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜாமீனில் விடுதலை செய்யக் கோரிய லாலு பிரசாதின் மேல்முறையீட்டு மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது. அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீது சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில் லாலு பிரசாதை ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
லாலு பிரசாத் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவரால் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது
.

No comments:

Post a Comment