14.12.13

போக்குவரத்துத் துறை சட்டப்பிரிவு பணிக்கு பி.எல். படித்தவர்களையே நியமிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் உள்ள சட்டப் பிரிவு பணிகளுக்கு சட்டக் கல்வித் தகுதி உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுப்பிரமணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறைகளில் துணை மேலாளர் (சட்டம்) மற்றும் மூத்த மேற்பார்வையாளர் பதவிக்கு பி.எல். படிப்பு படித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என அதன் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு போக்குவரத்து மண்டலத்தில் உள்ள துணை மேலாளராக (சட்டம், ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு) சடையப்பன் என்பவரும், கே.டி.கோவிந்தராஜன் என்பவரும் ஊழியர்கள் மற்றும் சட்டப்பணியாளர் துறைகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பதவிகளுக்கான தகுதி அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்படாமல், விதிகளுக்கு மாறாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த நியமனத்தை செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தனி நீதிபதியிடம் விசாரணை நடந்த போது, போக்குவரத்துத் துறை சட்டப் பிரிவில் துணை மேலாளர் என்ற பதவி கிடையாது. பதவி உயர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். குறிப்பிட்ட பதவிக்கு தகுதியான நபர்கள் இல்லையெனில் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர் என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சுப்பிரமணி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: சட்டப் பின்னணி இல்லாதவர்கள் சட்டப் பின்னணி உள்ள நபரை நம்ப வேண்டும். சட்டப் பிரச்னைகளை கையாள்வதற்கு மற்றவர்களை அனுமதிக்கும்போது அவர்கள் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். அது, வழக்குகளில்தான் முடியும். அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும். அரசுத் துறைகள் வழக்குகளில் ஆஜராவது, எதிர்த்து மேல்முறையீடு செய்வது போன்றவற்றைத் தவிர்த்தால் நீதிமன்றத்தின் நேரம் மிச்சமாகும். அரசுக்கு வருவாய் இழப்பும், மனுதாரர்களுக்கு துன்புறத்தல்களும் நேராது.
எனவே, போக்குவரத்துத் துறையின் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு உதவி மேலாளர் மற்றும் ஊழியர்கள் நலத்துறைப் பிரிவு ஆகியவற்றில் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டால் சட்டம் படித்தவர்களை மட்டுமே அப்பணியில் நியமிக்க வேண்டும். பதவி உயர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பாத நேரத்தில் நேரடித் தேர்வு மூலம் பி.எல். பயின்றவர்களை மட்டுமே அந்தப் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே பதவி உயர்வு பெற்றவர்கள், நேரடி பணி நியமனம் செய்தவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment