14.12.13

தெலங்கானா மசோதா: "மனம் திறந்து பேசுங்கள்'


தெலங்கானா வரைவு மசோதா பற்றி ஆந்திரத்தை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் நிதானமாக விவாதித்து கருத்து தெரிவிக்கலாம். அதன்பின் வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்தி இம்மசோதாவை நிறைவேற்றிக்கொள்ளலாம் என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்தார்.

இந்த வரைவு மசோதாவுக்கு ஆந்திர எம்எல்ஏ-க்களிடம் ஆதரவு திரட்ட ஹைதராபாதில் முகாமிட்டிருந்த அவர், தனது பணியை 2 நாட்களில் முடித்தபின் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹைதராபாதில் வசிக்கும் சீமாந்திரா பகுதி மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்வோம் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார்.
திக்விஜய் சிங் மேலும் கூறியதாவது: சோனியா காந்தியை பதவி விலகும்படி சொன்னதற்காக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திவாகர் ரெட்டிக்கு காரணவிளக்கம் கோரும் நோட்டீஸ் கொடுக்கப்படவிருக்கிறது.
தெலங்கானா வரைவு மசோதா ஆந்திர சட்டப்பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 40 நாட்களில் கருத்துக்கூறலாம் என அவகாசம் தரப்பட்டுள்ளது. எனவே, அனைத்துக் கட்சியினரும் மனப்பூர்வமாக விவாதித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கவேண்டும். பேரவையின் கருத்துகளுடன் குடியரசுத்தலைவருக்கு இந்த வரைவு மசோதா அனுப்பப்படும்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்தவேண்டும் என அவரிடம் கேட்டுக்கொள்ளப்படும்.
மசோதா குறித்து பல்வேறு கட்சியினரிடம் பேசினேன். முதல்வரிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஒவ்வொருவர் சொன்ன கருத்துக்களையும் பதிவு செய்துகொண்டேன். சீமாந்திரா, தெலங்கானா ஆகிய 2 பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே, வரைவு மசோதாவில் உள்ள ஒவ்வொரு ஷரத்து பற்றியும் மாறுபட்ட கருத்துகளைக்கூட தைரியமாக கூறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பாசனநீர்ப் பகிர்வு, எல்லைப் பிரிப்பு, சமூக, கலாசார பிரச்னைகள் என பல விஷயங்களையும் விரிவாக விவாதிக்கலாம்.
காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி முடிவுப்படிதான் இந்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே பின்பற்ற வேண்டியது மாநில முதல்வர் முதல் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாகும். அதேநேரத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மாற்றுக்கருத்துகளை தாராளமாக தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment