சென்னையைப் போல அனைத்துப் பெருநகரங்களில் உள்ள காவல்துறை துணை ஆணையர்களுக்கும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு இணையான அதிகாரம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்-காவல் துறை உயரதிகாரிகள் மாநாட்டில் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை 312 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
தமிழகத்தில் வாகனம் மோதி இறக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்; 40 வயதை பூர்த்தி செய்த காவலர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் என்பன போன்ற முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அந்த அறிவிப்புகளில் சில:
கோவை மாவட்டத்தில் வடவள்ளி, அன்னூர், மதுக்கரை காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும். பேரூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு புதிய முகாம் அலுவலகம் அமைக்கப்படும். கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலயைத்துக்கு புதிய கட்டடமும், திட்டக்குடி மற்றும் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், திருப்பூர் மவாட்டம் அவிநாசி ஆகிய இடங்களில் உள்ள டி.எஸ்.பி.களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகங்கள் கட்டப்படும்.
மாஜிஸ்திரேட் அதிகாரம்: சென்னை நகர காவல் துறையில் துணை ஆணையாளர்களுக்கு மாஜிஸ்திரேட்களுக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது, மற்ற பெருநகரங்களில் உள்ள காவல் துறை துணை ஆணையாளர்களுக்கும் வழங்கப்படும்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் புதிதாக தாலுகா மருத்துவமனையும், ஸ்ரீரங்கத்தில் குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்துக் காவல் நிலையங்களுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 35 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும்.
திருப்பூர் காவல் ஆணையரகம்: திருப்பூர் காவல் ஆணையரகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட நிலமும், காவலர் குடியிருப்பும் கட்டப்படும். கரூர் மாவட்டம் நெரூர் மற்றும் திருச்சி மாவட்டம் உன்னியூருக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மெலட்டூர், கபிஸ்தலம் காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடமும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடமும் கட்டப்படும்.
கடுமையான குற்றங்கள்: கொள்ளைச் சம்பவங்களில் ரூ.2 மற்றும் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டால் அவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்
மதுரை மற்றும் கன்னியாகுமரி சாலையில் புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும். திருவண்ணாமலையில் மத்திய பஸ் நிலையம், புதுக்கோட்டையில் காவல் நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.
தொடர்பு அதிகாரி நியமனம்: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் ஒரு தொடர்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பன்தட்டையில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கலலூரி அமைக்கப்படும்.
நிவாரண நிதி உயர்வு: சாலையில் செல்வோர் வாகனம் மோதி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தரப்படும் தொகை ரூ.2 லட்சமாகவும் காயம் அடைந்தோருக்கு ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி அளிக்கப்படும்.
தாய் திட்டம்: தாய் திட்டத்தின் கீழ் 50 ஊரகக் குடியிருப்புகளுக்கு அதிகமாக இருக்கும் கிராம பஞ்சாயத்துகளில் அதற்கான நிதி உயர்த்தி வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நடமாடும் மருத்துவ மையங்களும், அரசு ஊழியர்களுக்கு மலைப்பிரதேச படியாக வழங்கப்படும் தொகை மாதத்துக்கு ரூ.1,500-ம் உயர்த்தி வழங்கப்படும்.
தேனி மாவட்டம் போடி தாலுகாவை சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அரசு பெண்கள் பள்ளியில் விடுதியும், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment